தமிழகத்தில் விதிமுறைகளுக்கு புறம்பாக இயங்கும் சுங்கச்சாவடிகளை அகற்ற தமிழக அரசு முழு மூச்சுடன் பாடுபடும் -அமைச்சர் எ.வ வேலு பதில்.!


கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ரூ.1.50 கோடி செலவில் நினைவரங்கம், கி.ரா. சிலை மற்றும் நூலகம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. 

இப்பணிகளை தமிழகப் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகள் குறித்து அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரரிடம் கேட்டறிந்தனர். 


அப்போது மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ.வி. மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, தலைமைப் பொறியாளர் சந்திரசேகர், கண்காணிப்பு பொறியாளர் சுப்பிரமணியன், தூத்துக்குடி கோட்ட பொறியாளர் ஆறுமுக நயினார், கோவில்பட்டி உதவி கோட்ட பொறியாளர் கிரிஸ்டோபர், உதவிப் பொறியாளர் விக்னேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர் அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் கூறுகையில் :

கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் நினைவரங்கம் கிராமிய மண் மணம் மாறாமல் கட்டி முடிக்க திட்டமிட்டுள்ளோம். இன்னும் நான்கு மாத காலத்தில் பணிகளை முடிக்க உத்தேசித்துள்ளோம். முதலில் இங்கு கி.ரா.வின் கற்சிலை தான் அமைக்க வேண்டும் என முடிவெடுத்து இருந்தோம்.  தற்போது அதனை மாற்றி வெண்கல சிலை அமைக்க முடிவெடுத்து அதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்து வருகிறோம். 


தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக நெடுஞ்சாலைத் துறைக்கு உட்பட்டு 2305 கி.மீ. சாலை உள்ளது. இதில் முதல் கட்டமாக இந்த ஆண்டு 265 கி.மீ. சாலைகளை செப்பனிடுவது உறுதிப்படுத்துவது உள்ளிட்ட பணிகளுக்கு இந்த நிதியாண்டில் ரூ.200 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. 

தூத்துக்குடி மாவட்டத்துக்கு சாலை பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்த ரூ.7.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியிலிருந்து வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் வரை புதிய சாலை அமைக்க நில எடுப்பு பணிகளுக்கு ரூ.28.53 கோடி அரசு சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன. தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் சந்திப்பு பகுதியில் ரூ.30.75 கோடி செலவில் உயர்மட்ட பாலம் அமைக்க நில எடுப்பு பணிகள் நடந்து வருகின்றன.

திருச்செந்தூர் - பாளையங்கோட்டை - அம்பாசமுத்திரம் - தென்காசி - குற்றாலம் - செங்கோட்டை சாலை ரூ.438.73 கோடியில் 50.59 கி.மீ. விரிவாக்கம் செய்யும் பணிகள் கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழக முதல்வர் என்னிடம் தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு அந்த மாவட்டங் களுக்கு முன்னுரிமை கொடுங்கள் என்றார். எனவே இந்த மாவட்டத்துக்கு சாலை மற்றும் பாலங்கள் அமைப்பதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு சிறப்பாக செய்து கொடுப்போம். 

மாநில நெடுஞ்சாலைத் துறையை பொருத்தவரை பணிகளை செய்வதற்கு ஒப்பந்ததாரர் தகுதியானவரா என்பதை மட்டும் தான் பார்க்கிறோம். அவர் அந்த ஆட்சியில் வேலை செய்தவர் இந்த ஆட்சியில் வேலை செய்வார் என்பதை பார்ப்பதில்லை. அதேபோல் கடந்த ஆட்சியில் இருந்த பேக்கேஜ் முறை ஒழிக்கப்பட்டு, பணிகள் பரவல் ஆக்கப்பட்டுள்ளன. அதனால் இந்த முறை பரவலாக அனைத்து ஒப்பந்ததாரர்கள் இருக்கும் வேலை கிடைக்கும், என்று

கேரளாவை விட தமிழகத்தில் சுங்கச்சாவடிகள் அதிகமாக உள்ளது ஏற்கனவே இந்த சுங்கச்சாவடிகளை குறைக்க வேண்டும் என்றும் நகராட்சி எல்லைகள் மாநகராட்சி  உள்ளிட்ட பகுதிகளில் 10 கிலோ மீட்டருக்கு உள்ள  சுங்கச்சாவடிகள் இருக்க கூடாது என்ற விதி உள்ளது சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ளே நுழைகிற போதே பல்வேறு சுங்கச்சாவடிகள் உள்ளது இந்த சுங்கச்சாவடிகளை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் எழுதி உள்ளேன் 

இது குறித்து பேசியுள்ளேன் மேலும் சட்டமன்றத்திலும் பேசியுள்ளேன் அதன்விளைவாக கடந்த 2 வாரத்துக்கு முன்பாக சம்பந்தபட்ட அமைச்சர் அதிகாரிகளை சந்தித்து சுங்கச்சாவடி விஷயத்தில் ஒழுங்குபடுத்த வேண்டும் என கேட்டு உள்ளேன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்துப் பேசி முடிவு எடுத்திருக்கிறேன் எனக் கூறினார் அதன் தாக்கம் தான் 60 கிலோ மீட்டருக்கு உள்ள சுங்கச்சாவடிகள் எடுக்கப்படும் என ஒன்றிய அரசு கூறியுள்ளது.

ஆனால் எங்கள் துறை மூலம் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு எங்கெங்கெல்லாம் சுங்கச்சாவடிகள் உள்ளது என்று பட்டியல் கேட்டுள்ளேன் அந்த பட்டியல் வந்தவுடன் மீண்டும் ஒன்றிய அமைச்சருக்கு கடிதம் எழுதி சுங்கச்சாவடிகளை அகற்றுவதற்கு தமிழக அரசு முழு மூச்சுடன் பாடுபடும் என்றார் அவர்.

Previous Post Next Post