மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, நேற்றும் இன்றும் தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று அதிகாலை பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. தூத்துக்குடியில் நேற்று நள்ளிரவு முதல் அதிகாலை வரையில் பரவலாக மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் ஓடியது. சாலைகளில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சென்றனர். தூத்துக்குடியில் 18 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்தது.
தூத்துக்குடியில் நேற்றிரவு பெய்த மழையால் தூத்துக்குடி மாநகராட்சி 40வது வார்டுக்கு உட்பட்ட மறக்குடி தெரு, செயின்ட் பீட்டர் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்பதாக தகவல் வந்ததையடுத்து நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு தேவையான இடங்களில் மின்மோட்டார்கள் பொருத்தியும், லாரிகள் மூலமும் தேங்கிய வெள்ளநீரை வெளியேற்றவும், மேலும் அப்பகுதியில் உள்ள கழிவுநீர் வடிகால்களை தூர்வாரவும் உத்தரவிட்டார். இதனையடுத்து அப்பகுதியில் தேங்கி நின்ற நீர் உடனடியாக வெளியேற்றப்பட்டது.
அப்போது அவருடன் வார்டு கவுன்சிலர் ரிக்டா, மாநகர மீனவர் அணி துணை அமைப்பாளர் ஆர்தர் மசசாது, வட்டச் செயலாளர் டென்சிங், தொமுச மரியதாஸ், ஐடி லிங் சுரேஷ், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் சேசையா உட்பட பலர் உடனிருந்தனர்.
முன்னதாக மழை காரணமாக தூத்துக்குடி ஏவிஎம் மருத்துவமனை முன்பும், குரூஸ் பர்னாந்து சிலை அருகேயும் சாலையில் மழைநீர் தேங்கி இருப்பதாக தகவல் அறிந்த மேயர் ஜெகன் பெரியசாமி, காலை நேரத்தில் அலுவலகத்துக்கு செல்வோரும், குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்வோரும் பாதிக்க கூடாது என்பதற்காக உடனடியாக மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு லாரிகள் மூலம் தண்ணீரை அகற்ற உத்தரவிட்டார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மேயர், "தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் தேங்குதல் என்ற நிலை இனிமேல் இருக்காது என உறுதி அளிக்கிறேன். தூத்துக்குடி மாநகராட்சி சம்பந்தமான எவ்வித புகார்களாக இருந்தாலும் பொதுமக்கள் எந்நேரமும் +91 7397 731 065 என்ற வாட்சப் எண்ணிற்கு போன் மற்றும் வாட்ஸ்சப் மூலமாக தகவல் தெரிவிக்கலாம். உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் " என தெரிவித்தார்.