நாடு தழுவிய இரண்டு நாள் வேலை நிறுத்தம் : தூத்துக்குடி துறைமுகத்தில் தொழிற்சங்கத்தினர் மறியல் - ஏற்றுமதி இறக்குமதி பாதிப்பு.!


தொழிற்சங்கங்களின் நாடு தழுவிய இரண்டு நாள் வேலை நிறுத்தம் காரணமாக  தூத்துக்குடி மாவட்டத்தில் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி துறைமுகம் நுழைவு வாயில் முன்பு தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் லாரிகள் உள்ளே செல்ல முடியவில்லை இதனால் துறைமுக ஏற்றுமதி, இறக்குமதி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. 

நாடுமுழுவதும் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள 2 நாள் வேலைநிறுத்தம் இன்று தொடங்கியது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் 7 இடங்களில்  மறியல் போராட்டம் நடைபெற்றது. 

தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் காரணமாக தூத்துக்குடி வஉசி  துறைமுகத்தில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது துறைமுகத்தில் 5 கப்பல்களும், வெளி துறைமுகத்தில் 2 கப்பல்களும் நிற்கின்றது. துறைமுகம் நுழைவு வாயில் முன்பு தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டம் நடத்தியதால் லாரிகள் உள்ளே செல்ல முடியவில்லை. இதனால் 100க்கும் மேற்பட்ட லாரிகள் அணிவகுத்து நிற்கின்றன. 

இதுபோல் மாவட்டத்தில் உள்ள எப்சிஐ குடோன்களில் சுமார் 2ஆயிரம் தொழிலாளர்கள் பணிக்கு செல்லவில்லை. இதனால் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் 45ஆயிரம் டன் அரிசி, கோதுமை தானியங்கள் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பு நடந்த மறியல் போராட்டத்திற்கு தொமுச மாவட்ட செயலாளர் ரவீந்திரன், சிஐடியு  மாவட்டத் தலைவர் பேச்சிமுத்து ஏஐடியுசி மாவட்ட தலைவர் பாலசிங்கம், ஏஐசிசிடியூ மாவட்ட செயலாளர் சிவராமன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

இதில் தொமுச நிர்வாகிகள் முருகன், கருப்பசாமி, ஐஎன்டியுசி சந்திரசேகர், பால்ராஜ்  ராஜகோபாலன் வீரையா, கணேசன், முருகேசன், ஏஐடியுசி சங்கரவேல், சுப்பையா ஏஐஐசி சிஐடியு மாவட்ட தலைவர் சகாயம், 

தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் சீனிவாசன், ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பூமயில், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் எம்எஸ் முத்து, உட்பட பலர் கலந்து கொண்டனர். தூத்துக்குடியில் மறியலில் ஈடுபட்ட 13 பெண்கள் உட்பட 150பேரை போலீசார் கைது செய்தனர். 

இதுபோல் மாவட்டம் முழுவதும் 7 இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது. எட்டையபுரத்தில் 60 பெண்கள் உட்பட 140பேர், திருச்செந்தூரில் 20பெண்கள் உட்பட 100பேர், நாசரேத்தில் 30 பெண்கள் உட்பட 100பேர், கோவில்பட்டியில் 40பெண்கள் உட்பட  100பேர், ஓட்டப்பிடாரத்தில் 50பேர், விளாத்திகுளத்தில் 60பேர் என மாவட்டம் முழுவதும் 164 பெண்கள் உட்பட 650பேர் கைது செய்யப்பட்டனர்.

Previous Post Next Post