காட்டுவழி கடந்து ஏழாவது மலை உச்சியில் பரவச தரிசனம்... வெள்ளியங்கிரியில் முழங்கும் பஞ்சவாத்தியம்

கோவை அடுத்த பூண்டி வெள்ளியங்கிரி மலையில், மலையுச்சியில் பஞ்சவாத்தியம் முழங்க பூஜைகள் நடப்பதால்,  தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலை ஏறி பக்தி பரவசத்துடன் சாமி ரிசனம் செய்து வருகிறார்கள்.
கோவையை அடுத்த போலுவாம்பட்டி வனச்சரகத்தில் பூண்டி, வெள்ளியங்கிரி மலை உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள இந்த மலையில் வெள்ளியங்கிரி ஆண்டவர் ஏழாவது மலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 5100 அடி உயரத்தில் ஏழு மலைகள், கடினமான மலைப்பாதையில் நடந்து சென்று பக்தர்கள் சாமிதரிசனம் செய்கிறார்கள்.
காமதேனு வழிபட்ட மலை, சதுர்யுகம் கண்ட கோவில், தேவர்களும் வழிபட்ட கோவில் என்ற பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இந்த கோவில், வெள்ளை மேகங்கள் போர்த்தக்கூடிய உச்சிமலையில் அமைந்துள்ளது.  ஏழு மலைகளில் சிதிலமடைந்த கல்படிகளைக் கொண்ட முதல் மலை கடினமான மனம் கொண்டோரின் மனோதிடத்தை சோதிக்க வல்லது. 

முழங்கால் உயரப் படிகளில் ஏறி முதல் மலை உச்சியான வெள்ளை விநாயகர் கோவில் சென்று சேருவதற்குள் பலருக்கும் போதும்., போதும் என்றாகி விடும்.  முதல் மலையில் எங்குமே நாம் காணக்கிடைக்காத சோதிக்காய், சோதிப்புல் ஆகியவற்றைக் காணலாம். முதல் மலை முடிவில் உள்ள வெள்ளை விநாயகரை தரிசனம் செய்து விட்டு, அங்குள்ள சோடா, கலர் கடைகளில் லெமன் சோடா வாங்கிக் குடித்து விட்டு பக்தர்கள் தொடர்ச்சியாக நடக்கிறார்கள்.

   
 இரண்டாவது மலை கைதட்டி சுனை. இரண்டாவது மலை ஏறினால் சுனையில் வரும் மிகச் சுவையான தண்ணீரை பிடித்துக் குடிக்கலாம். மூன்றாவது மலையில் பாம்பாட்டி சித்தர் குகை உள்ளது. நான்காவது மலை சீதை வனம் உள்ளது. இந்த பரந்த வனப்பகுதியில் மலைப்பாதையை மேம்படுத்திய ஒட்டர் எனும் சித்தருக்கு சமாதி ஒன்று உள்ளது.

 இவரை வணங்கி விட்டு பக்தர்கள் தொடர்ச்சியாக நடக்கிறார்கள். ஐந்தாவது மலை பீமன் களியுருண்டை மலை எனப்படுகிறது. இந்த மலையில் மிகப்பெரிய பீமன் களியுருண்டை என்கிற பாறை உள்ளது. பக்கவாட்டில் மலையின் அருகே  சிறுவாணி வனப்பகுதிகள், அதன் நீராதாரமான அருவிகள், நீர்ப்பிடிப்பு பகுதிகளை ரசித்தவாறு செல்லலாம்.
   
 ஆறாவது மலை ஆண்டி சுனை உள்ளது. மலையேறும் பக்தர்கள் இங்கு குளித்து விட்டு செல்கிறார்கள். ஆண்டிசுனையில் மிகக் குளிர்ந்த தண்ணீர் இருக்கிறது. இந்த புனித நீரில் நீராடி விட்டு பக்தர்கள் அங்குள்ள சுக்குக்காபி கடையில் காபி குடித்து விட்டு செல்கிறார்கள். 

சுக்குக் காபிக்கடைக்கு பக்கவாட்டில் அர்ச்சுணன் தபசு என்கிற மிகப்பெரிய குகை உள்ளது. முற்காலத்தில் அர்ச்சுணன் இங்கு வந்து தவமிருந்தார் என்று கருதப்படுகிறது. தொடர்ச்சியாக ஏழாவது மலையான கிரிமலை, சுவாமி முடிமலையில் ஏறிச்செல்ல வேண்டும். இந்த ஏழாவது மலையும் மிகக் கடினமான மலையாக கருதப்படுகிறது.  
 ஏழு மலைகளையும் ஏறிச்சென்றால் தொங்கும் தோரணப்பாறைக்கு அடியில் பஞ்சலிங்கமாக, சுயம்புவாக  வெள்ளியங்கிரி ஆண்டவர் அருள்பாலிக்கிறார். இங்கு சாமிதரிசனம் செய்வதற்கு, வசந்தகால துவக்கமான மகாசிவராத்திரி முதல் சித்திரை மாத இறுதி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்; மற்ற நாட்களில் மலைமேல் கடுங்குளிரும், வனவிலங்குகளும் இருக்கும் என்பதால் அனுமதி கிடையாது.

 இந்நிலையில் இந்த ஆண்டு மகாசிவராத்திரி தொடங்கிய நாள் முதல் வெள்ளியங்கிரி மலையில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் கடும் மலைப்பாதையில் நடந்து மலை ஏறிச்சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.  வழியெல்லாம் இயற்கை அழகு கொட்டிக் கிடக்கிறது. நடந்து செல்லும் வழி தவற வேறு எங்கும் செல்ல வேண்டாம் என அங்கு செல்பவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். 

கோவிலுக்கு செல்லும் போது அடிவாரத்திலேயே வனத்துறையினர் பக்தர்களை நன்றாக சோதனை செய்து பிளாஸ்டிக் பொருட்கள், பீடி, சிகரெட் என அனைத்தும் பறிமுதல் செய்து விடுகிறார்கள். ஆனால் மலை முழுக்க உள்ள சின்னச்சின்ன கடைகளில் பிளாஸ்டிக் பைகளில் அடைத்து வைக்கப்பட்ட உணவுப்பண்டங்கள், குளிர்பானங்கள் தாராளமாக கிடைக்கிறது. இதைத்தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்காமல், அனுமதி இல்லாத கடைகளை ஏகத்துக்கும் அமைக்க விட்டு இருப்பதாக இந்த பகுதி மக்கள் புகார் சொல்கிறார்கள். ஏழாவது மலை உச்சியில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு பஞ்சவாத்தியங்களுடன், கைலாய மலையில் நடப்பது போன்ற காலை, மதியம், இரவு என மூன்று கால பூஜைகள் நடக்கிறது. 

இதை தரிசிக்க ஆயிரக்கணக்கானவர்கள் மலையில் காத்திருந்து சாமிதரிசனம் செய்கிறார்கள். இந்த ஆண்டு வெள்ளியங்கிரி மலை ஏறும் கூட்டம் அதிகரித்து இருப்பதாக அந்த பகுதியினர் தெரிவிக்கின்றனர்.  செந்தில்சாமி என்பவர் இறைவனுக்கு சிறப்பாக பூஜை செய்து, பாடல்கள் பாடி அமுது படைக்கிறார். காணக்கண் கோடி வேண்டும். 

 ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று வரும் வெள்ளியங்கிரி மலைப்பாதையை மேம்படுத்தினால் அரசுக்கு வருவாய் கிடைப்பதோடு, இன்னும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். கேதர்நாத், அமர்நாத் உள்ளிட்ட பகுதிகளில் அம்மாநில அரசுகள் ஹெலிகாப்டர் சேவைகளை ஏற்பாடு செய்து தந்துள்ளனர். அதுபோல இங்கும் ஹெலிகாப்டர் சேவைகள் வருமானால் மலை ஏற இயலாத வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும் என்பது மட்டும் உண்மை.

Photo and Video: Raveendhar
Previous Post Next Post