மேற்கு வங்க மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில் கடந்த 21ம் தேதி நடந்த வன்முறையில் 8 பேர் உயிருடன் எரித்து கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாது ஷேய்க் என்பவர் மார்ச் 21ம் தேதியன்று படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து, இவரது கொலை காரணமாக அவரது சொந்த ஊரான பீர்பூம் மாவட்டம் ராம்பூர்ஹாட்டில் போக்டுய் கிராமத்தில் ஏற்பட்ட வன்முறையில், நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் பல வீடுகளுக்கு தீ வைத்தனர், அதில் 8 பேர் உயிருடன் எரித்து கொல்லப்பட்டனர்.
இந்த வன்முறை சம்பவம், மேற்கு வங்காள மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கு எதிராக பாஜக போராட்டம் நடத்தி வருகிறது.
இந்த நிலையில், பீர்பூம் வன்முறை சம்பவம் தொடர்பாக கொல்கத்தா ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.
சாட்சிகள் பாதுகாக்கப்படுவதையும், அப்பகுதியில் ஆதாரங்கள் பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்யுமாறும், 24x7 கண்காணிப்பிற்காக சிசிடிவி கேமராக்களை பொருத்துமாறும் மேற்கு வங்காள மாநில அரசுக்கு நேற்று முன்தினம் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த நிலையில் 8 பேர் தீ வைத்து எரித்து கொல்லப்பட்டது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க கொல்கத்தா ஐகோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வந்த நிலையில் வழக்கை சிபிஐக்கு மாற்றி கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மேலும் விசாரணை அறிக்கையை ஏப்ரல் 7-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய சிபிஐக்கு கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.