தூத்துக்குடி பீச் ரோட்டில் பைக் மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியான நிலையில் மற்றொருவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள வீரபாண்டியன் பட்டினத்தை சேர்ந்தவர் அந்தோனி (36) த/பெ செல்வராஜ் , மீன்பிடி தொழிலாளியான இவர் நேற்றிரவு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள தனது மனைவியை பார்த்து விட்டு, இரு சக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
மற்றொரு இளைஞரான செல்வக்குமார் (22) த/பெ ஏரமல் ரெட்டி. டூவிபுரம் 10ம் நம்பர் தெருவில் வசித்து வரும் டிப்ளமோ இன்ஜினியரான இவர் ,தனியார் அனல்மின் நிலையத்தில் டெக்னீஷியனாக வேலை பார்த்து வருகிறார். சில வருடங்களுக்கு முன் தந்தையை இழந்த இவர், வேலைக்கு சென்று குடும்பத்தை கவனித்து வந்தார். நேற்றிரவு சுமார் 7.30 மணியளவில் வேலை முடிந்து இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த நிலையில்,
பீச் ரோடு படகு குழாம் அருகே வந்து கொண்டிருந்த போது பின்னால் வந்த லாரி செல்வக்குமார் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த நிலையில், எதிரே வந்த அந்தோனி மீது மோதியதில் அந்தோனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
படுகாயமடைந்த செல்வக்குமார் ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனக்கு கொண்டு வரப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விபத்து குறித்த தகவலறிந்து வந்த தூத்துக்குடி தென்பாகம் போலீசார் விபத்துக்குள்ளான இருவரையும் மருத்துமனைக்கு அனுப்பி வைத்ததுடன் , விபத்து ஏற்படுத்திய லாரியை கைப்பற்றி காவல் நிலையத்திற்க்கு கொண்டு சென்றனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி படகு குழாம் அருகேயுள்ள சாலை சமீப காலமாக அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து விலை மதிப்பற்ற உயிர்களை பலி வாங்கும் இடமாக மாறியுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் இப்பகுதியில் நடந்த விபத்தால் சுமார் பத்து பேர்கள் வரை உயிரிழந்திருப்பதாகவும், இங்கு நிகழும் விபத்துகள் பெரும்பாலும் இரவு நேரங்களிலேயே நிகழ்வதாகவும், பீச் ரோட்டில் உள்ள ரயில்வே கேட் முதல் படகு குழாம் வரையுள்ள பகுதிகள் விளக்குகள் இல்லாமல் இருட்டாக இருப்பதுடன், இரவில் வரும் வாகனங்கள் கண் கூசும் வகையில் முகப்பு விளக்குகளை (High Beam) ஒளிர விட்டு வருவதும் விபத்து ஏற்பட காரணமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அடிக்கடி விபத்து நடக்கும் பகுதியை அதிகாரிகள் ஆய்வு செய்து விபத்து நடக்காமல் தடுக்க விரைந்து நடவடிக்கை எடுப்பதுடன், விளக்கு இல்லாத இருட்டான வஉசி துறைமுக சபைக்கு சொந்தமான பகுதியில் விளக்குகளை அமைப்பதுடன், விபத்து ஏற்படாமல் தடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.