நீட் தேர்வில் இருந்து நாடு விடுதலை பெறும் - மு.க.ஸ்டாலின் பேச்சு


நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப கோரி தமிழ்நாடு ஆளுநரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று சந்தித்தார்.

அதேநேரத்தில், நீட் விலக்கு மசோதா உள்ளிட்ட 7 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத தமிழ்நாடு ஆளுநரை மாற்ற வேண்டும் என்று மக்களவையில் திமுக உறுப்பினர்கள் குழு தலைவர் டி.ஆர். பாலு வலியுறுத்தினார்.

இந்நிலையில், தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தம்பி மகன் திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் இன்று பேசுகையில்,


'நீட் தேர்வை ரத்து செய்யும் முயற்சியில் முதல் கட்ட வெற்றிச் செய்தி கிடைத்துள்ளது, ஏழை, எளிய, நடுத்தர மாணவர்களின் மருத்துவ கல்வி கனவை சிதைக்கும் நீட் தேர்வுக்கு விலக்க பெற வேண்டும் என சட்டமன்றத்தில் ஒரு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். பல மாதங்களாக அந்த மசோதான கிடப்பில் போடப்பட்டது. அதன் பின்னர் திடீரென ஒருநாள் அதனை திருப்பி அனுப்பி வைத்துவிட்டார்கள்.

இதையடுத்து உடனடியாக சட்டமன்றத்தை கூட்டி மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். அது எந்த நிலையில் உள்ளது என்று எங்களக்கு நேற்றுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து, நேற்றைய தினம் ஆளுநரை சந்தித்து நீட் மசோதா குறித்து விசாரித்தோம்.

அப்போது, ஆளுநர் எனக்கும் சட்டம் தெரியும், இரண்டாவது முறையாக நான் நீட் மசோதாவை திருப்பி அனுப்ப முடியாது. அதனால், குடியரசுத் தலைவருக்கு தான் அனுப்பி வைக்க வேண்டும். வேறு வழி கிடையாது அவருக்கு அனுப்பி வைக்கிறேன் என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.

ஆகவே முதல் படியில் வெற்றி பெற்றிருக்கிறோம். ஆதலால், விரைவில் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவோம் என்று நம்பிக்கை எனக்கு உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

Previous Post Next Post