இந்திய அரசை மத்திய அரசு என்று கூறுவதற்குப் பதிலாக ஒன்றிய அரசு என்று அழைக்க வேண்டும் என பாஜக எம்.பி. சுஷில்குமார் மோதி தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு சமர்ப்பித்த அறிக்கை, விவாதப் பொருளாக மாறியுள்ளது.
`இந்தியா என்பது மாநிலங்களால் அமைக்கப்பட்ட நாடு அல்ல. இந்தியாவால் அமைக்கப்பட்டதுதான் மாநிலங்கள். இதன் அர்த்தம் புரியாமல் சிலர் பேசி வருகின்றனர்' என பா.ஜ.க விமர்சித்துள்ளது.
மத்திய அரசின் பணியாளர், சட்டம் மற்றும் நீதி, பொதுமக்கள் குறைகள் ஆகியவற்றுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கடந்த மார்ச் 24 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர் சுஷில்குமார் மோதி தலைமையிலான குழு சமர்ப்பித்துள்ள இந்த அறிக்கை குறித்து `டெக்கான் ஹெரால்டு' நாளேடு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மத்திய அரசு என்ற வார்த்தையை இந்திய ஒன்றியம் என மாற்ற வேண்டும். நிர்வாகம், சட்டமன்றம், நீதித்துறை என அதிகாரத்தின் மூன்று பிரிவுகளும் இந்திய ஒன்றியத்தின் அங்கம் என அழைக்கப்பட வேண்டும்' எனவும் தெரிவித்துள்ளது. இந்த ஆலோசனைகள் நிலைக்குழுவில் அதிகார வரம்பை மீறியது என மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஆனால், அதிகார வரம்புக்கு உட்பட்டு செயல்படுவதாகவும் பரிந்துரை தெளிவாக இருப்பதாகக் குறிப்பிடும் நிலைக்குழு, அரசியமைப்புச் சட்டத்தை உருவாக்கும்போது மத்திய அரசு, ஒன்றிய அரசு என எது பயன்படுத்தப்பட்டது எனக் கூறுமாறும் கேட்டுக் கொண்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
அதேநேரம், தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்தே ஒன்றிய அரசு என்ற வார்த்தையைப் பயன்படுத்தி வருகிறது. இதற்கு பா.ஜ.க தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதுதொடர்பாக, தமிழ்நாடு சட்டமன்றத்தில் பா.ஜ.க உறுப்பினர் கேள்வியெழுப்பியபோது, `இந்திய அரசு என்பதை ஆங்கிலத்தில் யூனியன் கவர்ன்மெண்ட் என அழைப்பதால், நாங்கள் ஒன்றிய அரசு என்கிறோம். இது ஒன்றும் சமூக விரோத குற்றமல்ல' என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். இந்நிலையில், நாடாளுமன்ற நிலைக்குழு அளித்துள்ள பரிந்துரையை தி.மு.க வரவேற்றுள்ளது.