ஹிஜாப் உடையுடன் வந்த பெண்ணுக்கு அனுமதி மறுத்த உணவகம் - இழுத்து மூடி சீல் வைத்தது பஹ்ரைன் அரசு !

 

முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள பஹ்ரைனில் உள்ள ஒரு இந்திய உணவகம், #LanternsRestaurant ஹிஜாப் அணிந்து வந்த பெண்ணுக்கு நுழைய அனுமதி மறுத்ததாகக் கூறி உள்ளூர் அதிகாரிகளால் மூடப்பட்டது . புதையா, அம்வாஜ், அட்லியா, ரிஃபா உள்ளிட்ட நான்கு நகரங்களில் கிளைகளுடன் பஹ்ரைன் நாட்டில் பிரபலமான இந்திய உணவக பிராண்டாக இருந்த #LanternsRestaurant உணவகத்தை பஹ்ரைன் அரசு இழுத்து மூடி சீல் வைத்துள்ளது.

கர்நாடகாவில் கடந்த பிப்ரவரி மாதம் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்த மாணவிகளை பந்த்ரகர்ஸ் கல்லூரி முதல்வர் வாசலில் தடுத்து நிறுத்திய சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

அதனைத்தொடர்ந்து கர்நாடகா மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி - கல்லூரிகளில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்துவர தடைவிதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேவேளையில் இந்துத்வா மாணவர் அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து ஹிஜாப் அணிந்து கல்வி வளாகங்களுக்குச் செல்ல அனுமதிக்ககோரி 6 மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர், இந்த மனு மீதான வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், நீதிமன்றம், கர்நாடக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும்; ஹிஜாப் அணிவது என்பது இஸ்லாமிய மத சட்டத்தின் அத்தியாவசிய விஷயம் அல்ல என தீர்ப்பு அளித்திருந்தது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்தியாவில் வலதுசாரி கும்பல் இஸ்லாமிய மக்களின் நம்பிக்கை சார்ந்த விசயங்களில் தடைவிக்கும் போக்கும் அதிகரிக்கும் வேளையில், வெளிநாடுகளுக்கு வேலைச் சென்ற இடத்தில், சில வலதுசாரிகள் இந்துத்வா கருத்தை திணிக்கும் வகையில் செயல்பட்டு பின்னர் அங்கு கைது செய்யப்பட்டும், நிறுவனங்களில் இருந்து விரட்டியட்டிக்கப்பட்ட சம்பவம் எல்லாம் சமீகாலத்தில் நடந்து வந்துள்ளதாக செய்திகளில் மூலம் தெரியவந்தது.

அந்தவகையில் ஹிஜாப் அணிந்து வந்த முஸ்லிம் பெண்ணுக்கு அனுமதி மறுத்த இந்திய உணவகத்தை பஹ்ரைன் அரசு மூடியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திள்ளது. பஹ்ரைன் தலைநகர் மனாமாவின் அட்லியா பகுதியில் லான்டர்ன்ஸ் உணவகத்தில் (Lanterns restaurant) அமைந்துள்ளது. இந்த உணவகத்திற்கு வந்த முஸ்லிம் பெண்ணை அங்கிருந்த மேலாளர் ஒருவர் தடுத்து நிறுத்தி, உள்ளேச் செல்ல அனுமதி மறுத்தாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து இந்தவிகாரம் பஹ்ரைன் சுற்றுலா மற்றும் கண்காட்சி ஆணையத்திற்குச் சென்றது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய பஹ்ரைன் சுற்றுலா மற்றும் கண்காட்சி ஆணையம், சுற்றுலா மற்றும் நிறுவனங்கள் தொடர்பான 1986 ஆம் ஆண்டின் ஆணைச் சட்டம் 15 இன் படி உணவகத்தை மூடிவிட்டதாக தெரிவித்துள்ளது.

மேலும், நாட்டின் சட்டங்களை மீறும் கொள்கைகளைச் செயல்படுத்துவதை உணவகங்கள் தவிர்க்க வேண்டும். மக்களுக்கு எதிராக, குறிப்பாக அவர்களின் தேசிய அடையாளத்தைப் பற்றி பாகுபாடு காட்டும் அனைத்து செயல்களையும் நாங்கள் நிராகரிக்கிறோம் என அந்த ஆணையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, உணவகம் தங்களது சமூக ஊடகப் பக்கத்தில் முறைப்படி மன்னிப்புக் கேட்டது.

35 ஆண்டுகளாக சேவையில் உள்ள உணவகம், ராஜ்யத்தில் உள்ள அனைத்து நாட்டினரையும் வரவேற்று, மேலாளர் செய்த தவறுக்கு வருந்துவதாக Instagram இல் வெளியிடப்பட்ட மன்னிப்பு கூறுகிறது.

சம்பவம் நடந்த போது முக்காடு அணிந்த பெண் தனது நண்பருடன் உணவகத்திற்கு சென்றுள்ளார்.

"என் தோழி முக்காடு அணிந்திருந்ததால் உணவகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படாதது ஆச்சரியமாக இருந்தது" என்று உணவகத்திற்கு அவருடன் வந்த பெண்ணின் நண்பர் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோவில் வெளிப்படுத்தினார்.

"முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருக்கும் நாட்டில் இருப்பதால் உணவகங்கள் இதுபோன்ற முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்," என்று அவர் மேலும் கூறினார்.

முகமூடி அணிந்த பெண் ஒருவரை உணவக ஊழியர்கள் தடுக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததாக டெய்லி ட்ரிப்யூன் தெரிவித்துள்ளது.

இந்தியரான மேலாளர் சேவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றும் அதிகாரப்பூர்வ கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Ahamed

Senior Journalist

Previous Post Next Post