திருப்பூர் பழைய பேருந்து நிலையம் முன்புறம் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரிப்பால் பொதுமக்கள் சாலையில் இறங்கி நடந்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.
திருப்பூர் காமராஜர் சாலையில் அமைந்துள்ள பழைய பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புணரமைக்கப்பட்டு வருகிறது. இதனால் பழைய பேருந்து நிலையம் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
என்றாலும் பழைய பேருந்து நிலையம் அருகே தினசரி காய்கறி சந்தை பூ மார்க்கெட் உள்ளிட்டவை செயல்படுவதால் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் பொருட்களை வாங்க பொதுமக்கள் வருவது வழக்கம். இந்நிலையில் பழைய பேருந்து நிலையம் சுற்றிலும் ஏராளமான ஆக்கிரமிப்பு கடைகள் முளைத்து சாலையை ஒட்டி அமைந்துள்ளது. இதன்காரணமாக சாலை ஓரம் இடம் இல்லாமல் பொதுமக்கள் சாலைகளில் இறங்கி நடந்து பயணிக்கின்றனர். இதனால் பேருந்து மற்றும் வாகனங்கள் செல்ல சிரமமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அவ்வப்போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஓரிரு மாதங்களில் பழைய பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வர உள்ள நிலையில் ஆக்கிமிப்புகளை அகற்றாமல் அனைத்து பேருந்துகளும் ஒரே இடத்திற்கு வரும் பட்சத்தில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்