பெண் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்ததாக கைது செய்யப்பட்ட மருத்துவர் சுப்பையாவுக்கு ஜாமீன்.! - உயர்நீதிமன்றம் வழங்கியது.!

பெண் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்ததாக பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் பொது சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட மருத்துவர் சுப்பையாவிற்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக பிரபல புற்றுநோய் நிபுணரும் ஏபிவிபி அமைப்பின் முன்னாள் தலைவருமான மருத்துவர் சுப்பையா சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மூதாட்டின் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்ததாக புகார் எழுந்தது. இவ்விவகாரத்தில் அரும்பாக்கம் காவல்துறையினர் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கில் பொது சொத்துக்களை சேதப்படுத்தியது சட்ட பிரிவுகள் புதியதாக சேர்க்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த 19ம் தேதி மருத்துவர் சுப்பையா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டார்.

இந்த நிலையில் ஜாமீன் கோரி மருத்துவர் சுப்பையா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்து கொள்ளபட்டது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மருத்துவர் சுப்பையாவிற்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி இந்த வழக்கில் 2 ஆண்டுகளாக எந்தவிதமான முன்னேற்றம் இல்லாதபோது சட்ட பிரிவுகளை மாற்றியமைத்து மீண்டும் வழக்கு பதிய என்ன காரணம்? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து மருத்துவர் சுப்பையாவிற்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். மேலும், வழக்கு தொடர்பாக தமிழக காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 24ம் தேதிக்கு தள்ளி வைத்தார். முதலமைச்சர் வீடு முன் ஆர்ப்பாட்டம் நடத்திய ஏபிவிபி அமைப்பினரை சிறையில் சந்தித்தாக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை புற்றுநோய்த்துறை தலைவர் பதவியில் இருந்து சுப்பையா ஏற்கனவே நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.



 


 

Ahamed

Senior Journalist

Previous Post Next Post