ரஷ்யா உக்ரைன் போர் உச்ச கட்டத்தில் உள்ள நிலையில், அங்கிருந்து எப்படியாவது உயிரோடு வந்தால் போதும் என இந்தியர்கள் பரிதவித்துக் கொண்டிக்கும் வேளையில், உக்ரைன் பெண்னை காலித்து அவசர அவசரமாக காதல் திருமணம் செய்த இந்திய வாலிபர் ஜோடி அங்கிருந்து இந்தியா வந்தடைந்த நிலையில் இருவருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
உக்ரைன் மீது ரஷியா ராணுவம் கடந்த 24-ந் தேதி தொடங்கிய தாக்குதல் இன்று வரை நீடிக்கிறது.
எந்த நேரத்திலும் போர் மூளலாம் என்று கூறப்பட்ட நிலையில் உக்ரைனில் தங்கி இருந்த இந்தியர்கள் உடனடியாக சொந்த நாடு திரும்புமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து பணி நிமித்தமும், படிப்புக்காகவும் உக்ரைன் சென்றவர்கள் உடனடியாக இந்தியா திரும்பும் பணியில் ஈடுபட்டனர்.
ஐதராபாத்தை சேர்ந்த பிரதீக் என்ற வாலிபர் உக்ரைனில் தங்கி பணிபுரிந்து வந்தார். அங்கிருந்த போது அவருக்கும் உக்ரைன் நாட்டை சேர்ந்த இளம்பெண் லியுபோவ் என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.
இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த நேரத்தில்தான் உக்ரைன் போர் தொடங்கியது. இதை அறிந்ததும் அவர்கள் இருவரும் கடந்த 23-ந் தேதியே உக்ரைனில் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் முடிந்த கையோடு அவர்கள் இதுபற்றி உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். வாலிபர் பிரதீக்கும் இந்தியாவில் உள்ள பெற்றோருக்கு தகவல் கூறினார். அவர்கள் உடனே இருவரையும் இந்தியா வந்துவிடும்படி அறிவுறுத்தினர்.
அதன்படி போர்முனையில் காதல் திருமணம் செய்த ஜோடி அங்கிருந்து அவசரமாக இந்தியா வந்தனர். ஐதராபாத் வந்தடைந்த இருவருக்கும் இரண்டு நாட்களுக்கு முன்பு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
திருமண வரவேற்பில் பிரதீக்கின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். இதுபற்றி மணமக்கள் கூறம்போது, உக்ரைனில் நாங்கள் இருவரும் சந்தித்து கொண்டதுமே எங்களுக்குள் காதல் பூ பூத்துவிட்டது.
3 மாதங்களில் நாங்கள் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டோம். ஆனால் போர் மூண்டுவிட்டதால் அங்கேயே அவசரமாக திருமணம் செய்து கொண்டோம். பின்னர் இந்தியா வந்துவிட்டோம். இங்கு உறவினர்கள் எங்களின் திருமண வரவேற்பை நடத்தினர். அதோடு உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர சிறப்பு பூஜைகளும் நடத்துகிறார்கள், என்றனர்.