நேட்டோ நாடுகளின் ஆதிக்கத்தை தடுக்க உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா 2 வாரத்திற்கும் மேலாக போர் செய்து வருகிறது. இதனால் ரஷியாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள உலக நாடுகள் பலவும் அதன் மீது பொருளாதார தடையை விதித்துள்ளன.
இதன் ஒரு பகுதியாக ரஷியாவில் இயங்கி வரும் வெளிநாடுகளை சேர்ந்த டொயோட்டா, ஃபோக்ஸ்வாகன், ஜாகுவார், லேண்ட் ரோவர், மெர்செடிஸ் பென்ஸ், ஃபோர்ட், பி.எம்.டபில்யூ ஆகிய ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது வாகன உற்பத்தியையும், ஏற்றுமதியையும் நிறுத்தி வைத்துள்ளன.
இதையடுத்து வெளிநாட்டு அந்நிறுவனங்கள் தங்களது வாகன தயாரிப்பை மீண்டும் தொடங்காவிட்டால், அவர்களது அனைத்து தொழிற்சாலைகளும் தேசியமயமாக்கப்படும் என ரஷியா எச்சரித்துள்ளது.
ரஷ்யாவின் ஆளும் கட்சியான யுனைடெட் ரஷ்யா, பொருளாதாரத் தடைகளால் நாட்டை விட்டு வெளியேறும் வெளிநாட்டு நிறுவனங்களின் சொத்துக்களை தேசியமயமாக்குவதற்கான முதல் படிக்கு அரசாங்க ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளதாக புதன்கிழமை கூறியது.
யுனைடெட் ரஷ்யா டெலிகிராம் செய்தியிடல் செயலியில் ஒரு அறிக்கையில், "நட்பற்ற மாநிலங்களிலிருந்து" வெளிநாட்டினருக்கு சொந்தமான 25% க்கும் அதிகமான நிறுவனங்களை வெளிப்புற நிர்வாகத்தில் சேர்க்க அனுமதிக்கும் மசோதாவை சட்டமியற்றும் நடவடிக்கைக்கான ஆணையம் ஆதரித்துள்ளது.
இதையடுத்து ஹுண்டாய் நிறுவனம், போரின் காரணமாக விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் உற்பத்தியை நிறுத்தி இருப்பதாகவும், விரைவில் மீண்டும் உற்பத்தி தொடங்கப்படும் என தெரிவித்துள்ளது. ரெனால்ட், அவ்டோவாஸ் போன்ற நிறுவனங்களும் உற்பத்தியை தொடங்கப்போவதாக தெரிவித்துள்ளன.
ஐரோப்பா மற்றும் மேற்குலக நாடுகளில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான வாகனங்கள் ரஷியா மற்றும் உக்ரைனிலேயே உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில் ரஷியாவின் இந்த எச்சரிக்கை உலக நாடுகளை அச்சம் கொள்ள செய்துள்ளது.