புலி மூஞ்சில உறுமறீங்க.. புல்லட்டு வண்டிய பறக்க வுடுறீங்க... மிஸ்டர் என்.டி.ஆர்., என்ன சார் இதெல்லாம்?!

தியேட்டர்ல படம் பார்த்தாதான் சினிமா ஒரு தனி அனுபவம் என்பதை மீண்டும் ஒருமுறை தமிழ் சினிமா., சாரி.., பான் இந்தியா சினிமாவான ஆர்.ஆர்.ஆர்., காட்டி இருக்கிறது. வலிமைக்கு போட்டியாக வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த சினிமாப்படம் மார்ச்-25 ல் வந்து இறங்கியதும், ராஜ மவுலியின் பிரம்மாண்டத்துக்காகவே காத்திருந்த பலதரப்பும் படம் பார்க்க களத்தில் இறங்கினார்கள். கதையை யோசிக்கையில் எங்கேயோ பார்த்த பல படங்களின் அம்சம் இருந்தாலும், திரைக்கதையில் பின்னிப் பெடலெடுத்திருக்கிறார்கள். 3 மணி நேரப்படமும் அட்சர சுத்தமாக ‘அக்மார்க்’ எண்டெர்டெயின்மெண்ட்.
1920 களில் வாழ்ந்த சுதந்திர போராட்ட தியாகிகளாக ஜூனியர் என்.டி.ஆர்., ராம்சரண் இருவரும் மிரட்டி இருக்கிறார்கள். ராமனாக வரும், ராம்சரண் பீமனாக வரும் என்,டி.ஆர்., ஆகிய இருவருமே படத்தில் வெவ்வேறு பகுதியில் இருந்து பிரிட்டிஷாரை எதிர்த்துப் போராடுகிறார்கள். இந்த படம் கற்பனையும் கலந்ததாக இருப்பதால் தியேட்டர் அதிருகிறது. அடிலாபாத் வனப்பகுதியில் பழங்குட சிறுமியான மல்லி என்ற சிறுமியின் பாடல் பிடித்துப்போக, அந்த சிறுமியை பிரிட்டிஷார் கடத்தி சென்று விடுகிறார்கள். அவர்களை மீட்க பீமனாக என்.டி.ஆர்., வருகிறார். இன்னொரு பக்கம் ஒரு பழங்குடியின கூட்டத்து மக்களுக்கு பிரிட்டிஷாரின் ஆயுதங்களை கைப்பற்றி, சுதந்திர போராட்டத்தை தீவிரப்படுத்த ராமனாக ராம்சரண் வருகிறார். இவர்கள் இருவரும் தங்களது பணியை எவ்வாறு முடிக்கிறார்கள் என்பது தான் கதை. காட்டில் ஆரம்பிக்கும் இந்த படத்தின் பல காட்சிகள் அபோகலிப்டா முதல் பாகுபலி, மதராசப்பட்டினம் உள்பட நார்னியா பைட் வரை பல விஷயங்களை நியாபகப்படுத்துகிறது. அஜ்ய் தேவ்கன் தன் பங்குக்கு பழங்குடியின போராளி தலைவராக சிறப்பாக தனது பணியை செய்து இருக்கிறார். ஆலியாபட், ஷ்ரேயா படத்தில் வந்து செல்கிறார்கள். ராம்சரணும், என்.டி.ஆர்.,ம் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருக்கிறார்கள். படம் முழுக்க பிரேமுக்கு பிரேம், பல காட்சிகள் லாஜிக் மீறலாகத் தெரிந்தாலும் ஒரு பார்வையாளனாக முழு ‘சந்திரமுகி’யாகவே மாறும் அளவுக்கு திரைக்கதையை செதுக்கி இருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானோர் கூடிய கூட்டத்தில் இருந்து அதிகாரியின் மீது கல்லெறிந்த சீக்கிய இளைஞனை, கூட்டத்தில் புகுந்து அதகளம் பண்ணி தூக்கி வரும் ராம்சரண், தலையில் ரத்தத்தை ஊற்றிக் கொண்டு புலியை வலைபோட்டுப் பிடித்து அதன் முகத்துக்கு நேரே முகம் வைத்து கர்ஜிக்கும் என்.டி.ஆர்., அப்பப்பா... என்னே ஒரு வேற லெவல் சினிமா என்று தோன்றினாலும், ரசிக்கச் செய்யுமளவுக்கு காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். இன்னும் இது மாதிரி சீனுக்கு.., சீன் சிறப்பா செஞ்சிருக்காங்க.. ராம்சரணும், என்.டி.ஆர்.,ம் வெள்ளையர் கூட்டத்தில் ஆடும் ‘நாட்டுக்கூத்து’ பாடலுக்கு தியேட்டரில் உற்சாகம் பீறிடுகிறது.பேக் ரவுண்ட் மியூசிக் அனைத்து காட்சிகளிலும் அசத்தி இருக்கிறார்கள். கேமரா, எடிட்டிங், கிராபிக்ஸ் ஒர்க் இதிலெல்லாம் இதற்கு மேல் பண்ண முடியாது என்ற அளவுக்கு அசத்தி இருக்கிறார்கள். சிம்பிளா சொன்னா.., புல்லட் வண்டியை பறக்க விடுறதையும்., புலி மூஞ்சிக்கிட்ட போய் உறுமறதையும் நீங்களே ரசிப்பீங்க பாருங்க.., ஆத்தாடி இந்த ராஜமவுலி., நம்ம ஆளுகளையும் ஆந்திரா ஸ்டைல்ல மிளகாயை திங்க வைச்சு வெறி ஏத்தி விட்டுருவார் போல., இன்னும் சீனுக்கு சீன் சிறப்பா செஞ்சிருக்காங்க.. படம் நல்லாருக்கு.., தியேட்டர்ல பாருங்க.., 3டில இன்னும் மிரட்டும்..
Previous Post Next Post