தமிழக மீனவர்கள் இந்தோனேசிய கடற்படையினரால் சிறைபிடிப்பு.! - கன்னியாகுமரியில் பரபரப்பு.!

கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இந்தோனேசிய கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இதனால் கன்னியாகுமரி மீனவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அந்தமானில் தங்கி இயந்திர படகு மூலம் மீன்பிடித்து வந்த கன்னியாகுமரி மீனவர்கள், கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இந்தோனேசியாவின் ஆச்சே மாகாண காவல்துறையின் மரைன் மற்றும் ஏர் போலீஸ் இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டதாக மாநில மீன்வளத்துறை அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.

கடந்த திங்கட்கிழமை ஆச்சே பெசார் மாவட்டத்தில் உள்ள லூங் கடற்கரையில் இருந்து 18 கடல் மைல் தொலைவில் இந்தோனேசிய கடல் போலீசார் மீன்பிடி கருவிகள், ஜிபிஎஸ் கருவி, திசைகாட்டி, மொபைல் போன் மற்றும் சுமார் 700 கிலோகிராம் மீன்களை இழுவை படகில் இருந்து பறிமுதல் செய்தனர். 

இந்தோனேசியப் பகுதியில் மீன் பிடிக்க அனுமதிச் சீட்டு இல்லாததால் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, விசைபடகுடன் அவர்களை  சிறைபிடித்துள்ளதாக அம்மாகான அதிகாரிகள் தெரிவித்தனர்

இது குறித்து கடற்படை அதிகாரி அல்டினோ கூறுகையில்"அச்சே பெசார் மாவட்டத்தில் உள்ள லூங் கடற்பகுதியில், உள்ளூர் நேரப்படி திங்கள்கிழமை (மார்ச் 7, 2022) மதியம் 1 மணியளவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்திய மீனவர்களின் மோட்டார் கப்பல் லூங் கடற்கரையிலிருந்து 18 மைல் தொலைவில் இருந்தது," என்று அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில் "எட்டு இந்திய மீனவர்கள் மேரி ஜஷிண்டோஸ் (34), இம்மானுவல் சோ (29), முட்னோப்பா (48), சிஜின் (29), பிரவின் (19), லிபின் (34), டொமன் (24), மற்றும் டோன்போசுகோ (48) என அடையாளம் காணப்பட்டனர்" என அவர் கூறினார், 

இந்திய மீனவர்கள் இழுவை இல்லாமல் 60 டன் எடையுள்ள மோட்டார் கப்பலைப் பயன்படுத்தி மீன்பிடித்து வருவதாக அல்டினோ கூறினார்.

இதனிடையே, 8 மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கன்னியாகுமரியில் உள்ள மீனவர் சங்கத்தினர் மற்றும் மீனவர்களின் குடும்பத்தினர்  அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இச்சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-அஹமத் 

Ahamed

Senior Journalist

Previous Post Next Post