கோவில்பட்டி அருகே அய்யநேரி கிராமத்துக்கு உட்பட்ட சுபா நகரில் கோயிலை நிர்வகிப்பது தொடர்பாக இருதரப்பு பிரச்சினை தொடர்பாக வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான கூட்டம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அய்யநேரி கிராமத்துக்கு உட்பட்ட சுபா நகரில் உள்ள ஸ்ரீபெருமாள் கோயில் அறக்கட்டளை மூலம் நிறுவப்பட்ட கோயில் நிர்வாக தலைவரை தேர்ந்தெடுப்பதில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக நேற்று கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டம் வட்டாட்சியர் அமுதா தலைமை வகித்தார். துணை வட்டாட்சியர் கோவிந்தராஜ், காவல் உதவி ஆய்வாளர் ராஜேஷ்கண்ணா மற்றும் அதிகாரிகள், இருதரப்பை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், சுபா நகர் ஸ்ரீபெருமாள் கோயில் அறக்கட்டளைக்கு வதிமுறைகளை ஏற்படுத்தி மாவட்ட பதிவாளர் அலுவலத்தில் பதிவு செய்ய வேண்டும் என ஒரு தரப்பினர் தெரிவித்தனர்.
புதிய அறக்கட்டளை உறுப்பினராக பதிவு செய்திட 24 பேரின் பெயர்களை முன்மொழிந்தனர். மற்றொரு தரப்பினர் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள அறக்கட்டளை உறுப்பினர்கள் 11 பேரிடம் கலந்து ஆலோசித்து முடிவு செய்ய கால அவகாசம் கேட்டனர். மேலும், தங்களது தரப்பு உறுப்பினர் விபரத்தை கொடுக்க 2 நாட்கள் அவகாசம் கேட்டனர்.
இதைதொடர்ந்து, இருதரப்பினரும் ஒருமித்த கருத்துடன் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்து மாவட்ட பதிவாளரிடம் கோயில் அறக்கட்டளை பதிவு செய்திட ஏதுவாக இரு தரப்பினருக்கும் 2 நாட்கள் கால அவகாசம் வழங்கி, வரும் 31-ம் தேதி மாலை 4 மணிக்கு மீண்டும் கூட்டம் நடத்தி தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை இருதரப்பினரும் ஏற்றுக்கொண்டு கலைந்து சென்றனர்.