ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பரிசலில் பவானி ஆற்றை கடந்து மறுகரையில் உள்ள கிராமத்தில் எழுந்தருளி பண்ணாரி அம்மன் அருள்பாலித்தார்.
வரும் 21,22 ஆம் தேதிகளில் பிரசித்திபெற்ற பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இதனையொட்டி சத்தியமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் பண்ணாரி அம்மன் திருவீதி உலா நடைபெற்று வருகிறது.
கடந்த 9ம் தேதி சிக்கரசம்பாளையம் கிராமத்தில் இருந்து தொடங்கிய திருவீதி உலா இன்று மாலை இக்கரை தத்தப்பள்ளி பவானி ஆற்றங்கரைக்கு வந்தடைந்தது. அக்கரை தத்தப்பள்ளி கிராமத்திற்கு எழுந்தருள்வதற்காக பரிசலில் பண்ணாரி அம்மனின் சப்பரம் பவானி ஆற்றைக் கடந்தது.
பின்னர் மறுகரையில் இருந்த பக்தர்கள், பழங்குடியினரின் வாத்தியம் மற்றும் தாரை, தப்பட்டை முழங்க பக்தி கோஷம் எழுப்பி, அதிர்வேட்டுகள் முழங்க அம்மனை வரவேற்றனர். பின்னர் அக்கரை தத்தப்பள்ளி கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு, பக்தி பரவசத்துடன் சுவாமியை தரிசித்து சென்றனர்..
தமிழ் அஞ்சல் செய்திகளுக்காக சத்தியமங்கலம் செய்தியாளர் நாராயணசாமி