மீண்டும் விஸ்வருபமெடுக்கும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் - தூத்துக்குடியில் பரபரப்பு.!


13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க, மக்களை தூண்டிவிட்டு பணம், அரிசி உள்ளிட்டவைகளை ஸ்டெர்லைட் நிர்வாகம் வழங்கி வருவதாக புகார் கூறி பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டது தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி சிப்காட் பகுதியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி 13 பேரை பலி வாங்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து அரசாணை பிறப்பித்து இழுத்து மூடப்பட்டது. 


இந்நிலையில் ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் தூண்டுதலின் பேரில் பணம் , பொருள் பெற்றுக் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க ஆலை நிர்வாகம் கிராம மக்களை தூண்டுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தன. 


இந்நிலையில் சில கிராம மக்களும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம்  மனு அளித்தனர். இந்த விவகாரம் பொதுமக்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து நேற்று தூத்துக்குடி  பாத்திமாநகர் பகுதி பொதுமக்கள் திடீரென அப்பகுதியில் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மக்கள் போராட்டத்தையடுத்து பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். 


தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம்  தூத்துக்குடி நகரில் உள்ள மக்களுக்கு ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக இருக்கும் படி கூறி பணம், அரிசி உள்ளிட்டவைகளை வழங்கி வருவதாகவும், இதனை தடுத்து நிறுத்த கோரியும் 


ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக செயல்படுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய கோரியும் நேற்றிரவு பாத்திமாநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனை தொடர்ந்து தூத்துக்குடி மத்தியபாகம் காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான இந்த திடீர் போராட்டம் குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் செய்தியாளர்களிடையே பேசுகையில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த கலவரத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்து இழுத்து மூடிய இந்த ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கும் முயற்சியில் ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனம் இறங்கி உள்ளது.


கல்வி உதவி, வேலை உதவி, உணவு, வீடு கட்டுமான‌ உதவி என பல்வேறு பல பெயர்களிலும் பொதுமக்களை ஏமாற்றி ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவான நிலைப்பாட்டை உருவாக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. 

எனவே ஆலைக்கு ஆதரவாக செயல்பட்டு மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கும் நபர்களை உடனே கைது செய்ய வேண்டும் இல்லையென்றால் சாலை  மறியலில் ஈடுபடபோவதாக தெரிவித்தனர்.


இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பினர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனிடம் புகார் மனுவினை அளித்தனர். 

அந்த மனுவில் நாசகார ஸ்டெர்லைட் நயவஞ்சக செயல்பாட்டை தடுத்து நிறுத்த கூறுவதுடன் இதற்கு முழுக் காரணமாக மூளையாக இருந்து செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் நிர்வாக அதிகாரி சுமதி தலைமையில் இயங்கும் கைக்கூலிகள் 

2018ஆம் ஆண்டு போராட்டம் முதலில் தொடங்கிய குமரெட்டியபுரம் கிராமத்தை உடைப்பதற்கான இயங்கும் சர்வேசன் சுந்தர்ராஜன் 

பண்டாரம்பட்டி கிராமத்தை உடைப்பதற்கு என இயங்கும் தமிழரசன் இசக்கியப்பன் மாரியப்பன் 

கடற்கரைப்பகுதி ஒழிப்பதற்கு என இயங்கும் கனிஸ்

மகளிர் சுய உதவி குழுக்கள் என்ற பெயரில் இயங்கும் தனலட்சுமி ஜெயகனி 

பாத்திமா நகரைச் சேர்ந்த கைக்கூலிகள் சாலினி நான்சி இந்திரா ரீங்கா உள்ளிட்ட அனைவரையும் கைது நடவடிக்கை உள்ளாகி தூத்துக்குடியில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் காத்திட வேண்டும் என்று அம்மனுவில் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ந்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பின் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் மக்களிடையே பிளவை ஏற்படுத்தி வருவதாகவும் இதனால் ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு துணைபோகும் ஆதரவாளர்களை கைது செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

Previous Post Next Post