மேலூர் சிறுமி மரணம், 8 பேர் கைது : தவறான தகவல்களை பரப்பினால் கடும் நடவடிக்கை – போலீஸ் எச்சரிக்கை


மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த தும்பைபட்டியில் காதலனோடு வீட்டை விட்டு சென்று, மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்த 17 வயது சிறுமி, கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகவில்லை என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

காதலர் தினத்தன்று அந்த சிறுமியின் காதலன் என்று கூறப்படும் இளைஞர் அவரை வீட்டைவிட்டு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. பிறகு அந்தச் சிறுமியை மயங்கிய நிலையில் அந்த இளைஞனின் தாய், அந்த சிறுமியின் வீட்டுக்கு அனுப்பிவைத்தார்.

மதுரை ராஜாஜி மருந்ததுவமனையில் சேர்க்கப்பட்ட அந்த சிறுமி 3 நாள் சிகிச்சைக்குப் பிறகு நேற்று இறந்துவிட்டார்.

இது தொடர்பாக தும்பைபட்டியை சேர்ந்த அந்த இளைஞர் நாகூர் ஹனிபா, அவரது தந்தை சுல்தான், அவனது தாய் மதினா சகோதரர் ராஜாமுகமது உறவினர்களான ரம்ஜான்பேகம், சாகுல் ஹமீது உள்ளிட்ட 8 பேரை மேலூர் போலீசார் கைது செய்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 5க்கும் மேற்பட்ட மர்மநபர்கள், மதுரையில் இருந்து திருச்சி நோக்கி, தும்பைப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற அரசு பேருந்து மீது கல் மற்றும் கட்டைகளால் தாக்கியதில் பேருந்தில் பயணம் செய்த திருநெல்வேலியை சேர்ந்த கல்லூரி மாணவிகள் அயிலா, லக்சிதா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மேலும் தும்பைப்பட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் ஒரே இடத்தில் கூடியதால் காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் அவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கலைந்து செல்ல வலியுறுத்தினர். அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்ட நிலையில், அந்த பகுதி பதற்றமாக காணப்பட்டது.

இந்நிலையில் சிறுமி உயிரிழந்தது ஏன் என்று சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான கருத்துக்கள் பகிரப்பட்டு வந்தன.

நடந்தது என்ன?

எனவே, நடந்தது என்ன என்பது குறித்து குறித்து விளக்கம் அளிப்பதற்காக நேற்று மாலை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

சிறுமி தனது காதலர் நாகூர் ஹனிபாவுடன் காதலர் தினத்தன்று வீட்டைவிட்டு வெளியேறி சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறுமியை ஈரோட்டுக்கு அழைத்துச்சென்று ஒரு வீட்டில் கணவன் மனைவியாக வாழ்ந்ததாகவும், சிறுமியுடன் கட்டாயப் பாலியல் உறவில் ஈடுபடவில்லை என்றும் நாகூர் ஹனிபா விசாரணையில் கூறியதாக, பாஸ்கரன் தெரிவித்தார்.

போலீஸ் தேடுவதை அறிந்து நாகூர்ஹனிபாவும் அந்த சிறுமியும் தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

இதனால், உடல் நிலை பாதிக்கப்பட்ட சிறுமியை அவரது வீட்டில் நாகூர்ஹனிபாவின் தாயார் விட்டுசென்றுள்ளார். மதுரை சிறுமியை கடத்தி கூட்டு பாலியல் வல்லுறவு செய்ததாக தவறான செய்தி பரப்பப்படுகிறது.

சிறுமியிடம் நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் கூட்டுப் லியல் வல்லுறவு நடக்கவில்லை, உடலில் எந்தவித காயமும் இல்லை என்பதும் கையில் குளுகோஸ் ஏற்றியதற்கான தடயமே உள்ளது எனவும் மருத்துவ அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

சிறுமி கடத்தல் வழக்கில் நாகூர் ஹனிபா, தாய், தந்தை, உறவினர்கள் நண்பர்கள் உள்ளிட்ட 8 பேர், போக்சோ சட்டத்தின் கீழும், கடத்தல், கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழும் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தவறான தகவல்களை பரப்பக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் போக்சா வழக்கு பதிவாகியுள்ளதால் சிறுமியின் புகைப்படத்தையோ, பெயரையோ பயன்படுத்தக்கூடாது என்றும் அவர் கூறினார்.

சிறுமி உயிரிழந்த நிலையில் இந்த வழக்கு கொலை வழக்காகவும் மாற்றப்பட்டுள்ளது எனவும், போலீசார் இந்த வழக்கில் போதிய கவனத்துடன் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர் என்றும் பெற்றோருக்கு உறுதி அளித்துள்ளதாகவும் அவர் கூறினார். அப்பகுதியில் போதிய போலீஸ் பாதுகாப்புக்கும் அவர் உத்தரவாதம் அளித்தார்

Previous Post Next Post