இலங்கை பொருளாதார நெருக்கடி: இந்தியா 7500 கோடி ரூபாய் கடனுதவி.!


கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் இலங்கைக்கு இந்தியா ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கவுள்ளதாக, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரின் ட்விட்டர் பதிவில், "இந்தியா இலங்கையுடன் துணை நிற்கிறது, அத்தியாவசிய பொருட்களுக்கான விநியோகத்திற்காக ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 7500 கோடி) மதிப்பிலான கடனுதவிகள் வழங்க கையெழுத்தாகியுள்ளது," என்று தெரிவித்திருந்தார்.


இதுகுறித்து இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், "இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்புக்கான திட்டங்கள் முன்னெடுப்பு குறித்து பசில் ராஜபக்ச இந்திய பிரதமர் நரேந்திர மோதியுடன் உரையாடினார்.

இந்தியாவின், பிராந்தியத்தில் அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி மற்றும் அண்டை நாடுகள் கொள்கையில் இலங்கை முக்கிய பங்காற்றுவது குறித்தும் இந்திய பிரதமர் பேசினார்.


மேலும் இலங்கையின் மக்களுடன் இந்தியா தொடர்ந்து துணை நிற்கும் என்பதை பிரதமர் மோதி மீண்டும் வலியுறுத்தினார்.

அதேபோல, இருநாட்டு சுற்றுலாப் போக்குவரத்துகளை தீவிரப்படுத்தும் முயற்சிகள் குறித்தும் பிரதமர் மோதி உரையாடினார்," என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இலங்கையில் 2020ம் ஆண்டு கோவிட் தொற்று பாதிக்கப்பட்ட நிலையில், அரசாங்கத்தின் வசம் கையிருப்பிலிருந்த அந்நிய செலாவணி கடுமையாக வீழ்ச்சி அடைந்தது. இதையடுத்து, இலங்கை பொருளாதார ரீதியில் படிப்படியாக பின்னடைவை சந்தித்து வந்த நிலையில், தற்போது நெருக்கடியின் உச்சத்தை தொட்டுள்ளது.

Previous Post Next Post