சுதந்திரத்திற்காக பாடுப்பட்ட தியாகிகளை நாம் எப்போதும் மறந்து விடக்கூடாது என்ற உன்னத நோக்கில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் சுதந்திர போராட்ட தியாகிகளின் தியாகத்தை போற்றும் வகையில் அவர்களுக்கு சிறப்பு செய்து வருகிறார்கள். சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் நினைவு மண்டபங்கள் அமைக்கப்பட்டு அவர்களுக்கு பிறந்தநாள், நினைவுநாட்களில் அரசு சார்பில் சிறப்பு மரியாதைகள் செய்யப்பட்டு வருகிறது. சுதந்திர போராட்டத்தில் திருநெல்வேலி மாவட்டம் பெரும் பங்காற்றியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வ.உசி மைதானத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா நிகழ்ச்சியை கொண்டாடும் வகையில் பொருநை புத்தகத் திருவிழாவில் ஒரு பகுதியாக சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற்ற திருநெல்வேலி மாவட்ட தியாகிகளின் புகைப்படங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது. தியாகிகளின் புகைப்பட கண்காட்சியை இளம் தலைமுறையினர் பார்த்து பயன்பெரும் வகையில் அமைந்திருந்தது.
75வது சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா புகைப்பட கண்காட்சியை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு, எம்எல்ஏக்கள் அப்துல்வகாப் மற்றும் ரூபி.ஆர்.மனோகரன், மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் 17.03.2022 அன்று திறந்து வைத்து பார்வையிட்டார்கள்.அதனைத் தொடர்ந்து 11 நாட்கள் புத்தகத் திருவிழா நடைபெற்ற நிகழ்ச்சியில் தியாகிகளின் புகைப்பட கண்காட்சியை 2 லட்சம் பார்வையாளர்கள் பார்வையிட்டு அவர்களின் தியாகங்களை பற்றி தெரிந்து கொண்டனர். மேலும் பல்வேறு துறைகளின் மூலம் அமைக்கப்பட்ட அரங்குகளில் அந்தந்த துறையின் மூலம் பெறக் கூடிய அரசின் நலத் திட்டங்களை பற்றியும், எவ்வாறு பயன்களை பெறுவது என்பது குறித்து பொது மக்களுக்கு அலுவலர்கள் விளக்கி கூறினார்கள் திட்டங்களின் செயல்பாடுகள் பற்றியும் பொது மக்கள் தெரிந்து கொண்டனர்.