ஏற்றுமதி நிறுவன உரிமையாளரிடம் போலி காசோலை கொடுத்து ரூ.6லட்சத்து 75ஆயிரம் பண மோசடி - வாலிபர் கைது.

தூத்துக்குடியில் ஏற்றுமதி நிறுவன உரிமையாளரிடம் போலி காசோலை கொடுத்து ரூ.6லட்சத்து 75ஆயிரம் பணம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

கன்னியாகுமரி மாவட்டம், நெய்யூர், பெரியாபள்ளியைச் சேர்ந்த சத்தியராஜ் மகன் சஜின் (33) என்பவர் காஞ்சிபுரம் மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் ஏற்றுமதி நிறுவனம் வைத்துள்ளார். இந்நிலையில் இவரது நிறுவனத்தில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் மணிநகரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் தனசெல்வ கணேஷ் (34) என்பவர் சஜினிடம் கொழும்புவிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு ரூ.9 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள 25 டன் வெங்காயம் ஏற்றுமதி செய்து கொடுக்கும்படி கேட்டுள்ளார். 

இதனையடுத்து சஜின் தனது நிறுவனத்தின் மூலம் தூத்துக்குடி துறைமுகம் வழியாக 25 டன் வெங்காயத்தை கொழும்புவிலுள்ள அந்த நிறுவனத்திற்கு ஒரு கண்டெய்னரில் ஏற்றுமதி செய்துள்ளார். இந்நிலையில் சஜின் அவரது நிறுவனத்தின் மூலம் ரூ.9லட்சத்து 75ஆயிரம் மதிப்புள்ள 25 டன் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ததற்கு தனசெல்வ கணேஷ் சஜினுக்கு இரு தவணைகளில் மொத்தம் 3 லட்சம்  பணத்தை மட்டும் கொடுத்து மீதி ரூ.6லட்சத்து 75ஆயிரத்தை வங்கி காசோலை கொடுத்துள்ளார்.  

ஆனால் அந்த காசோலையில் பணம் இல்லாமல் மோசடி செய்யப்பட்டது சஜினுக்கு தெரிய வந்துள்ளது.இதுகுறித்து சஜின் அளித்த புகாரின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவுபடி மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயராம் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் வனிதாராணி, சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகசுந்தரம், தலைமைக் காவலர் பிள்ளைமுத்து தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மேற்படி தனசெல்வ கணேஷை இன்று கைது செய்தனர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post