கோவில்பட்டி அருகே உள்ள வில்லிசேரி கிராமத்தில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் 5பவுன் தங்க நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், தகுதியுள்ள அனைவருக்கும் கடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டும், கடன் தள்ளுபடி செய்யப்பட்டதில் உள்ள முறைகேடுகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த இரண்டு நாட்களாக கூட்டுறவு சங்கத்தினை முற்றுகையிட்டு அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் 3வது நாளாக வில்லிசேரி கிராமம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோவில்பட்டி - நெல்லை இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கோவில்பட்டி டிஎஸ்பி உதயசூரியன் பொதுமக்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தினார். மக்களின் கோரி குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்க ஏற்பாடு செய்வதாக கூறியதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இதற்கிடையில் போராட்டத்தினை தூண்டியதாக கயத்தார் சிபிஎம் ஒன்றிய செயலாளர் சலமோனை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து வேனில் ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.