அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 58 இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியதில் ரூ. 84 லட்சம், 11.15 கிலோ தங்கம், 118 கிலோ வெள்ளி, 34 லட்சம் கிரிப்டோ கரன்சி மற்றும் கணக்கில் வராத கோடிக்கணக்கான சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரித்துள்ளனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி. வேலுமணி. தற்போது கோவை தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், அதிமுக சட்டப் பேரவை கொறடாவாகவும் உள்ளார்.
இதற்கிடையில், எஸ்பி வேலுமணியின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வருமானத்தை விட கூடுதலாக 58.23 கோடிக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பத் துறையினர் வழக்குப் பதிவு செய்த நிலையில், எஸ்.பி. வேலுமணி வீடு உள்பட 58 இடங்களில் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னை, கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், எஸ்.பி.வேலுமணியின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத 84 லட்ச ரூபாய் பணம், 11.15 கிலோ தங்கம், 118 கிலோ வெள்ளி, சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. மேலும், எஸ்.பி. வேலுமணி கிரிப்டோகரன்சியில் ரூ.34 லட்சத்திற்கு முதலீடு செய்துள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
இந்த சோதனையின் போது செல்போன்கள், மடிக்கணினிகள், ஹார்ட் டிஸ்க்குகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. மேலும், இந்த சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் எஸ்.பி.வேலுமணி இல்லம் உள்ள பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அதிமுக தொண்டர்கள் தங்களுடைய மொபைலில் ஃபிளாஷ் லைட் அடித்தபடி நின்றனர்.