உலமாக்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்க 50% மானியம்: ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய இரு சக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் தகுதியான உலமா பணியாளர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட வக்பு நிறுவனங்களில் உள்ள உலமாக்களுக்கு புதிய இரு சக்கர வாகனங்கள் வாங்க ரூ.25ஆயிரம் அல்லது வாகத்தின் விலையில் 50 சதவீதம் இதில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கபடும். 

இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளை தேர்வு செய்ய மாவட்ட ஆட்சியரை தலைவராகவும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை உறுப்பினர் செயலர் / கூட்டுநராகவும், முன்னோடி வங்கி மேலாளர் மற்றும் வக்பு வாரிய கண்காணிப்பாளரை உறுப்பினராகவும் கொண்ட தேர்வு குழு ஒன்று அமைக்கப்படும். இத்திட்டத்தில் பயன் பெற கல்வித்தகுதி அவசியமில்லை. 

மேலும் மனுதாரர் ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையான அட்டை நகல், மின்னணு குடும்பஅட்டை நகல் , வயது சான்றிதழ் (18 வயது முதல் 45 வயது வரை), வருமானச் சான்றிதழ், புகைப்படம், மாற்றுத்திறனாளியாக இருப்பின் உரிய அலுவலரிடம் பெறப்பட்ட சான்று, சாதிச்சான்று நகல், ஓட்டுநர் உரிமம் நகல், வங்கி கணக்கு எண் மற்றும் IFSC குறியீடுடன் கூடிய வங்கி கணக்கு எண் புத்தகத்தின் முதல்பக்க நகல், சம்பந்தப்பட்ட முத்தவல்லியிடம் எத்தனை ஆண்டுகள் வக்பில் பணிபுரிகிறார் என்பதற்கான சான்று பெற்று மாவட்ட வக்பு கண்காணிப்பாளர் மேலொப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் வாகனம் வாங்குவதற்கான விலைப்பட்டியல் / விலைப்புள்ளி ஆகியவற்றுடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வேலை நாட்களில் நேரில் வந்து விண்ணப்பத்தினை பெற்றுக்கொண்டு மனு செய்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்

Ahamed

Senior Journalist

Previous Post Next Post