வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த வடுகன்தாங்கல் பிள்ளையார் கோயில் தெருவை ஐயப்பன் என்பவரின் மகன் கணேஷ் என்கிற விநாயகம் (24). கூலி தொழிலாளியான இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு வேலூர் தனியார் ஐ.டி கல்லூரியில் படித்தார். அங்கு படிக்கும் போது இவருக்கும் இவரது கல்லூரியில் படித்த குடியாத்தம் தரணம்பேட்டை பகுதியை சேர்ந்த பாலாஜி - லதா தம்பதியின் மகள் சுப்ரஜா (24) என்பவருக்கும் காதல் மலர்ந்துள்ளது.
இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்து கொண்டு முடினாம்பட்டு பகுதியில் வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் கணவன் விநாயகம் வேறு பெண்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், இதனால் அவ்வபோது கணவன் மனைவி இடையே தகராறு ஏற்படுமாம். வழக்கம் போல் கடந்த 2 மாதத்துக்கு முன்பு, இதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இந்த சம்பவத்தையடுத்து சுப்ரஜாவை காணவில்லை.
உறவினர்களிடமும் தனது அத்தை தனலட்சுமி இடமும் தொடர்புகொண்டு பேசும் சுப்ரஜா கடந்த 2 மாதங்களுக்கு மேலாக தொடர்பு கொள்ளாமல் இருப்பதால் சந்தேகமடைந்து, அவரது அத்தை தனலஷ்மி, விநாயகமிடம் விசாரித்துள்ளனர். விநாயகம் முன்னுக்கு பின்னுமாக முரணாக பதில் அளித்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த அவரது அத்தை தனலஷ்மி நேற்று முன்தினம் கே.வி.குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் நேற்று காலை கே.வி.குப்பம் போலிசார் விநாயகம், அவரது சகோதரர் விஜய் மற்றும் உறவினர் சிவா ஆகிய மூவரையும் சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர்.
விசாரணையில் வேறோரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதால், அதற்கு இடையூராக இருந்த மனைவி சுப்ராஜாவை, கடந்த ஜனவரி 19 ஆம் தேதி முடினாம்பட்டு அருகே வேலூர் வனத்துறை எல்லைக்குட்பட்ட அரசுக்கு சொந்தமான சர்கார் தோப்பில் தனது சகோதரர் விஜய் மற்றும் உறவினர் சிவா ஆகியோரின் உதவியுடன் கொன்று புதைத்தாக கூறியுள்ளார்.
இதன் அடிப்படையில் நேற்று மாலை புதைத்த இடத்தில் தாசில்தார் சரண்யா தலைமையில், டி.எஸ்.பி ராமமூர்த்தி, இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி, உள்ளிட்ட வருவாய் துறையினர், காவல் துறையினர், மருத்துவ குழுவினர், வனத்துறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி அந்த இடத்தில் தோண்டினர். தோண்டிய போது கிடைத்த உடல் பாகங்கள், எலும்புகள் உள்ளிட்டவை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனை தொடர்ந்து கொலை செய்த வழக்கு, கொலைக்கான ஆதாரங்களை மறைத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விநாயகம், விஜய், சிவா ஆகிய மூவரையும் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி கைது செய்தார். இதில் விநாயகம் மற்றும் விஜய் என்பவரை சிறையிலும், சிவா என்ற சிறுவனை செங்கல்பட்டு சீர்திருத்த பள்ளியில் சேர்த்துள்ளனர். வேறோரு பெண்ணுடன் இருந்த தொடர்புக்கு இடையூராக இருந்த தனது காதல் மனைவியையே அடித்து கொன்று புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.