திருப்பூர், நெருப்பெரிச்சல் பகுதியைச் சார்ந்தவர் மணிகண்டன். இவர் திருப்பூரில் பனியன் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி சிவதேவி (40). இவர்களது மகன் விஜய் கோவிந்தன் (16) பத்தாம் வகுப்பு படிக்கிறார். மற்றும் இவர்களது உறவினரான கோவையைச் சேர்ந்த மீனாட்சி நகர் சம்பத்குமாரின் மகள் ஷாமிலி (19). இவர் கோவை இந்துஸ்தான் கல்லூரியில் படித்து வந்தார். இவர்கள் உள்பட 13 பேர் ஸ்கார்பியோ காரில் கொடிவேரி சுற்றுலாவிற்கு செல்வதற்காக வந்து உள்ளனர்.
வரும் வழியில் கூடக்கரை எனும் பகுதியில் கீழ்பவானி வாய்க்காலை பார்த்ததும் அங்கு வண்டியை நிறுத்திவிட்டு வாய்க்காலில் இறங்கி குளித்து உள்ளார்கள். அப்போது அவர்கள் உற்சாகமாக குளித்து கொண்டிருந்த போது விஜய் கோவிந்தன் வாய்க்கால் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு இருக்கிறார். இதை பார்த்த சிவ தேவி தனது மகன் விஜய் கோவிந்தனை காப்பாற்றுவதற்காக முயற்சி செய்துள்ளார். அவரையும் தண்ணீர் இழுத்துச் சென்றுள்ளது. அதைப்பார்த்து ஷாமிலி காப்பாற்றுவதற்காக முயற்சி எடுத்துள்ளார். இதில் நீரோட்டம் ஷாமிலியையும் அடித்துச் சென்றுவிட்டது. இதனையடுத்து தகவலறிந்து சத்யமங்கலம் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரில் தேடி 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளார்கள். சுற்றுலா வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவ தேவியின் தந்தை பரமசிவம் அளித்த புகாரின் பேரில் கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகிறார்கள்.