காயல்பட்டினம், நாகலாபுரம், ஒட்டனத்தம் பகுதி மக்களுக்காக புதிதாக 3, ஆம்புலன்ஸ் வாகனங்களை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், காயல்பட்டினம், நாகலாபுரம், ஒட்டனத்தம் பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 3 புதிய 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை இன்று (03.03.2022) துவங்கி வைத்து தெரிவிக்கையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை மக்கள் சேவைக்காக 2 பச்சிளம் குழந்தைகளுக்கு என்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இங்குபேட்டர் வசதிகளுடன் கூடிய (Neonattal Life Support -NLS) ஆம்புலன்ஸ்,
3 வென்டிலேட்டர் வசதிகளுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட உயிர்காக்கும் (Advanced Life Support -ALS) ஆம்புலன்ஸ் மற்றும் 17 அடிப்படை வசதிகளுடைய (Basic Life Support - BLS) ஆம்புலன்ஸ், பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் அனைத்து அவசரகால மருந்துகள் மற்றும் உபகரணங்களுடன் உயிர்காக்கும் சேவைகள் அளிக்கப்படுகிறது.
மேலும் இன்று புதியதாக வரப்பெற்ற 3 ஆம்புலன்ஸ் வாகனங்கள் காயல்பட்டினம் அரசு மருத்துவமனை, நாகலாபுரம் ஆரம்பசுகாதார நிலையம், ஒட்டனத்தம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், ஆகிய ஊர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு மக்களின் சேவைக்காக இயக்கப்படவுள்ளது. புதிதாக வரப்பெற்ற 3 வாகனங்கள் என மொத்தம் 25 ஆம்புலன்ஸ் வாகனங்கள் பொதுமக்களின் சேவைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இனிவரும் காலங்களில் விபத்து தாய்சேய் நலம் மற்றும் அவசர சிகிச்சைக்காக பொதுமக்கள் தங்குதடையின்றி முழுமையாக 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் சுகாதார நலப்பணிகள் இணை இயக்குநர் பொன்இசக்கி, 108 ஆம்புலன்ஸ் வாகன மேலாளர் ரஞ்சித் விஸ்வநாத், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுனில் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.