2 நாள் வேலை நிறுத்தம்: திருப்பூரில் பஸ்கள் இயங்காததால் பொதுமக்கள் அவதி!

நாடு தழுவிய தொழிற்சங்கங்களின் போராட்டத்தால் திருப்பூர் மாநகரில் 10 சதவீத பேருந்துகள் கூட இயங்கவில்லை. இதனால் பொதுமக்களும் பள்ளி மாணவர்களும் பெரும் அவதிக்கு ஆளானார்கள். பள்ளிக்கு வர காலதாமதம் ஆனாலும் மாணவர்கள் கவலை கொள்ள வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார். 

மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளை கண்டித்தும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கலை கண்டித்தும், 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் தொழிற் சங்கங்களின் சார்பில் இரண்டு நாள் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி திருப்பூரில் இந்த போராட்டம் இன்று தொடங்கி உள்ளது. 

போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் இந்த போராட்டத்தில் பங்கெடுத்துள்ளனர். இதனால் திருப்பூர் மாவட்டத்தில்  இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய 546 பேருந்துகளில் 56க்கும் குறைவான பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. மேலும் திருப்பூர் மாநகர் பகுதிகளில் இயக்கப்படும் 185 பேருந்துகளில் வெறும் 10 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. 

வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்கும் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் பணிக்கு வராத காரணத்தால் அனைத்து பேருந்துகளும் அந்தந்த டெப்போகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து டெப்போகளிலும் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். திருப்பூர் மாநகரில் இரண்டு சதவீத அளவிற்கு கூட பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்களும் வேலைக்கு செல்பவர்களும் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளும் மிகுந்த அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் பொதுமக்களின் கூட்டமானது அதிகளவில் உள்ளது ஆனால் பேருந்துகள் இயக்கப்படாததால் தனியார் பேருந்துகளில் முண்டியடித்து ஏறும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பேருந்துகள் இயங்காமல் இருப்பதால் பள்ளி மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் வினித் தெரிவித்துள்ளார் அதுமட்டுமின்றி மாணவர்கள் இன்று பள்ளிக்கு தாமதமாக வந்தாலும் பிரச்சனை இல்லை என்றும் அவர்களுக்கான மாற்று ஏற்பாடுகள் விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் பனியன் கம்பெனிகள் உள்பட தனியார் நிறுவனங்கள் பெரும்பாலானவை வழக்கம்போல இயங்கின. 



Previous Post Next Post