தூத்துக்குடியில் சைனிக் பள்ளி - தனியார் பள்ளியுடன் இனைந்து நடத்த பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் - நாடு முழுவதும் 21 பள்ளிகள் திறக்கவும் ஒப்புதல்

தூத்துக்குடி உட்பட நாட்டின் 21 இடங்களில் சைனிக் பள்ளி அமைக்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. தூத்துக்குடியில் விகாசா பள்ளியுடன் இனைந்து நடத்த பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

தேசியக் கல்விக் கொள்கையின்படி, மாணவர்களுக்கு தரமான கல்வியுடன், ஆயுதப் படையில் சேர்வதற்கான பயிற்சி வழங்கும் வகையில் நாடு முழுவதும் 100 புதிய சைனிக் பள்ளிகள் திறக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

இத்திட்டத்தில் முதல்கட்டமாக 21 புதிய சைனிக் பள்ளிகள் தொடங்க பாதுகாப்பு அமைச்சகம் நேற்று அனுமதி வழங்கியது. இதுதொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில்,:-

‘அரசு சாரா நிறுவனங்கள், தனியார் பள்ளிகள், மாநில அரசுகளுடன் இணைந்து கூட்டு முயற்சியில் நடப்புக் கல்வியாண்டில் நாடு முழுவதும் 21 புதிய சைனிக் பள்ளிகளை தொடங்குவதற்கு பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் உள்ள விகாசா என்ற தனியார் பள்ளியுடன் இணைந்து சைனிக் பள்ளியை திறப்பதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. 

நாட்டில் 100 புதிய சைனிக் பள்ளிகளை தொடங்குவது என்ற அரசின் முன்னெடுப்பின் கீழ் முதற்கட்ட நடவடிக்கையாக இப்பள்ளிகள் தொடங்கப்படவுள்ளன. தற்போது இருக்கும் சைனிக் பள்ளிகளில் இருந்து புதிய பள்ளிகள் மாறுபட்டதாக இருக்கும். தேசிய கல்விக் கொள்கையுடன் ராணுவத்தில் சேர்வது உட்பட சிறந்த வேலைவாய்ப்புகளை பெறும் வகையில், தரமான கல்வியை அளிக்க 100 புதிய சைனிக் பள்ளிகளை அமைக்க வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின் கீழ் இந்தப் பள்ளிகள் தொடங்கப்படவுள்ளது.

இதன்மூலம், தனியார் துறையும் அரசுடன் இணைந்து நாட்டை கட்டமைக்கும் பணிகளில் ஈடுபட்டு இன்றைய இளைஞர்களை நாளை பொறுப்புமிக்க குடிமக்களாக திகழச் செய்ய முடியும். அரசு சாரா நிறுவனங்கள், அறக்கட்டளைகள் ஆகியவற்றுக்கு 12 புதிய பள்ளிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆறு தனியார் பள்ளிகளிலும், 3 மாநில அரசு பள்ளிகளிலும் சைனிக் பள்ளிகள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது தற்போதுள்ள சைனிக் பள்ளியில் உள்ளது போல், அனைத்து பள்ளிகளும் உண்டு - உறைவிட பள்ளிகளாக இருக்காது. மொத்தமுள்ள 21 புதிய சைனிக் பள்ளிகளில் 7 பள்ளிகள் வழக்கமான பள்ளிகளாகவும், 14 பள்ளிகள் உண்டு-உறைவிட பள்ளிகளாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசியப் பாதுகாப்புக் கல்வி நிறுவனத்தில் (National Defence Academy) சேர்க்கை பெறுவதற்கான கல்வி, உடல்நிலை மற்றும் மனநிலை போன்றவைகளை உருவாக்கும் நோக்கத்துடன் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், அமராவதி நகரில் அமைந்திருக்கும் சைனிக் பள்ளி உட்பட இந்தியா முழுவதும் 33 இடங்களில் சைனிக் பள்ளிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

இந்நிலையில் தூத்துக்குடி உட்பட மேலும் 21 பள்ளிகள் தொடங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.


Ahamed

Senior Journalist

Previous Post Next Post