15 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீரா..? குமுறும் திருப்பூர் பொதுமக்கள்!

திருப்பூர் மாநகரம் பனியன் தொழில் காரணமாக உலக அளவில் பிரசித்தி பெற்ற மாநகரமாகும். இங்கு சுமார் 10 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். இது தவிர பனியன் தொழில் தேடி வந்த வெளிமாவட்ட மக்கள் சுமார் 4 லட்சம் பேரும், வடமாநில தொழிலாளர்கள் சுமார் 4 லட்சம் பேரும் என மொத்தமாக சுமார் 18 லட்சம் மக்கள் வசிப்பதாக கருதப்படுகிறது. திருப்பூர் மாநகரில் நாளுக்கு நாள் மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. 

இந்த நிலையில், திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் தீராத குடிநீர் பிரச்சினை ஏற்ப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதிப்படுகிறார்கள்.  திருப்பூர் மாநகராட்சியானது பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்கிறது. திருப்பூர் நகராட்சியாக இருந்த போது பல்வேறு பகுதிகளில் 3 நாட்களுக்கு ஒருமுறை பைப்களில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. அது இல்லாத பகுதிகளுக்கும் 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. 


நாளடைவில் திருப்பூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு திருப்பூர் மாநகராட்சியின் குடிநீர் விநியோக குளறுபடி தொடங்கியது. 5 அல்லது 6 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த நடைமுறை முற்றிலும் மாறுபட்டு மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் 12 முதல் 15 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீர் இல்லாமல் பெரும் அவதிக்கு ஆளாகிறார்கள். 

இதுபற்றி திருப்பூர் பகுதி பொதுமக்கள் கூறுகையில்:
திருப்பூரில் வசிக்கும் பனியன் தொழிலாளிகள் பலரும் திருப்பூர் மாநகராட்சியின் குடிநீர் விநியோக குளறுபடியால் பெரும் தவிப்புக்கு ஆளாகிறார்கள். எந்த ஒரு பகுதியிலும் மாநகராட்சி முறையாக குடிநீர் விநியோகம் செய்வதில்லை. எந்த நாளில், எத்தணை மணிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்பதெல்லாம் யாருக்குமே தெரியாது. மாநகராட்சி பணியாளர்கள் விரும்பினால் 12 அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. 

அதுவும் வழக்கம்போல குறைந்த நேரம் குடிநீர் விநியோகம் செய்து விட்டு, நிறுத்தி விடுகிறார்கள். திருப்பூர் பொதுமக்கள் பெரும்பாலும் காலையிலேயே கிளம்பி பனியன் கம்பெனிக்கு வேலைக்கு செல்ல வேண்டி இருப்பதால், காசு கொடுத்து குடிநீர் வாங்கும் நிலை உள்ளது. அதுவும் பல நேரங்களில் கிடைக்காமல், குடிநீர் பற்றாக்குறையால் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கிறோம். 

கோடை காலத்தில் குடிநீர் தேவை அதிகம் என்ற நிலையில், இவர்கள் வழக்கமாக விநியோகிக்கும் குடிநீரையே வழங்குவதில்லை. மாநகராட்சி நிர்வாகம் எத்தணை நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்கிறது. எந்த நேரத்தில் குடிநீர் வழங்க முடியும் என்ற விஷயங்களை பொதுமக்களுக்கு அறிவித்து விட்டு, பொதுமக்களுக்கு தேவையான அளவு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இப்படியே தொடர்ச்சியாக குடிநீர் விநியோகத்தில் இழுபறி நீட்டிக்கப்பட்டால் பொதுமக்கள் திரண்டு பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தும் நிலை தொடரும் என்றும் பொதுமக்கள் குமுறலாக கூறினார்கள். 
Previous Post Next Post