12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கம் சார்பில் கோவில்பட்டியில் ஊழியர்கள் சாலை மறியல்


புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மின்சார சட்டத்திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்து, திட்டத்தை நகரங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்ய கூடாது. பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். 



பெட்ரோலிய பொருட்கள் மீதான கலால் வரியை குறைத்து, அனைத்து பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொ.மு.ச., சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி., ஏ.ஐ.சி.சி.டி.யு., ஹெச்.எம்.எஸ். சங்கங்கள் சார்பில் கோவில்பட்டியில் பயணியர் விடுதி முன்பு மறியல் போராட்டம் நடந்தது. 

சி.ஐ.டி.யு. மாநிலக்குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி, ஐ.என்.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் ராஜசேகரன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட துணை தலைவர் தமிழரசன், தொ.மு.ச. மத்திய சங்க துணை பொதுச்செயலாளர் சோமு ஆகியோர் தலைமையில் தொழிற்சங்க நிர்வாகிகள் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து  காவல் துணை கண்காணிப்பாளர் உதயசூரியன் தலைமையிலான போலீஸார், மறியலில் ஈடுபட்ட 44 பெண்கள் உட்பட 158 பேரை கைது செய்தனர்.

Previous Post Next Post