பாலிடெக்னிக், ஐடிஐ மாணவிகளுக்கும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அதிரடி அறிவிப்பு செய்துள்ளது. நிதித்துறையில் ஒற்றைச்சாளர முறை கொண்டு வரப்படும் எனவும் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
அரசுப் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு பாலிடெக்னிக், ஐடிஐ செல்லும் மாணவிகளுக்கும் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
பொதுபட்ஜெட் மீதான விவாதத்துக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று பதிலுரை அளித்தார். அதில், 10ஆம் வகுப்பு படித்து விட்டு பாலிடெக்னிக், ஐடிஐ படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று அமைச்சர் அறிவித்தார். அரசு பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரையில் பயிலும் மாணவிகள், உயர்கல்வியில் சேரும்போது மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று என்று பட்ஜெட்டில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. 10ஆம் வகுப்பு முடித்துவிட்டு பாலிடெக்னிக், ஐடிஐ படிக்கும் மாணவிகளுக்கு அரசு அறிவித்த தொகை கிடைக்குமா? என்று சந்தேகம் எழுந்த நிலையில் தற்போது அமைச்சர் அதற்கு விளக்கமளித்துள்ளார்.
முன்னதாக, காமராஜர் பெயரில் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம் ரூ.1000 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என்றும், நிதித்துறையில் ஒற்றைச்சாளர முறை கொண்டு வரப்படும் எனவும் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
மதுரை மெட்ரோ ரயில் சேவைக்கான சாத்தியக்கூறு பற்றி ஆய்வு செய்து மே மாதத்திற்குள் தெரிவிக்கப்படும் என்று பொதுபட்ஜெட் மீதான விவாதத்துக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் பதிலுரையின்போது கூறினார். மேலும், கோவை மெட்ரோல் ரயிலுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாராகிவிட்டது என்றும் கூறினார்.
19 சட்ட மசோதாக்கள் ஆளுநரின் பரிசீலனையில் உள்ளதாகவும், பொருளாதார ஆலோசனைக்கான குழுவினர் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் பணியாற்றுகின்றனர், முதலமைச்சர் மீது மரியாதை வைத்தும், நாட்டுக்காகவும் பணியாற்றுக்கிறார்கள் எனவும் அமைச்சர் பிடிஆர் கூறினார்.
மேலும், தமிழ்நாட்டில் 90 சதவீதம் குடும்பத்திற்கு மேல் செல்போன் வைத்திருக்கிறார்கள் என்றும், தமிழ்நாடு ஏழை மாநிலம் அல்ல, வளர்ந்த மாநிலம் என்றும், தமிழ்நாட்டில் 75 சதவீதத்துக்கு மேலான மக்கள் சொந்த வீட்டில் வசிக்கிறார்கள் எனவும் கூறினார்.
அதிமுக ஆட்சியில் கடன் அளவு அதிகரிப்பு
“கலைஞர் ஆட்சி நிறைவடையும்போது தமிழ்நாடு அரசின் கடன் மாநில ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 17.33% ஆக இருந்தது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு 15.55 சதவீதமாக கடன் அளவு குறைக்கப்பட்டது. ஜெயலலிதா ஆட்சிக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் மீண்டும் கடன் மளமளவென்று உயர்ந்துவிட்டது” என்று அமைச்சர் பிடிஆர் கூறினார்.