இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள கடும் விலைவாசி காரணமாக அங்கு வாழவே முடியாத சூழலில், தஞ்சம் கேட்டு படகு மூலம் தமிழகத்தின் தனுஷ்கோடி வந்த 3 குழந்தைகள் உள்ளிட்ட 6 பேரை கடலோர காவல்படையினர் மீட்டுள்ளனர். இதன் மூலம் இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் இந்தியாவில் முதல் அகதிகள் வருகை ஆரம்பமாகியிருக்கிறது.
நேற்று இரவு மன்னார் மாவட்டம் பேச்சாலை கடற்கரையில் இருந்து மன்னாரை சேர்ந்த கஜேந்திரன், மேரிகிளாரி, நிசாத், கியூரி, எஸ்தர், மோசஸ் உள்ளிட்ட 6 பேர் நான்கு மாத கைக்குழந்தையுடன் பைபர் படகில் புறப்பட்டு இன்று அதிகாலை சுமார் 1 மணி அளவில் தனுஷ்கோடி அடுத்துள்ள நான்காம் மணல்திட்டு பகுதியில் வந்து இறங்கினர்.
அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், இலங்கை தமிழர்களை அழைத்து வர மண்டபம் கடலோர காவல்படை முகாமிற்கு சொந்தமான ஹேவர்கிராப்ட் கப்பல் சென்றது. மணல் திட்டில் காலை முதல் குடிநீர் மற்றும் உணவு இல்லாமல் தவித்து வந்த ஆறு இலங்கைத் தமிழர்களை மீட்டு இந்திய கடலோர காவல் படையினர் மண்டபம் முகாமுக்கு அழைத்து வந்தனர்.
கடந்த சில ஆண்டுகளாகவே இலங்கை கடுமையான பொருளாதாரச் சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. இந்தச் சூழலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா இலங்கையில் பொருளாதார அடித்தளத்தையே அசைத்து பார்த்துள்ளது.
இலங்கையின் பொருளாதாரம் என்பது சுற்றுலாத் துறையை சார்ந்ததே. இந்தச் சூழலில் கொரோனா காரணமாக இரு ஆண்டுகளாக சுற்றுலாத்துறை முடக்கி கிடக்கிறது. எனவே, சுற்றுலாவை நம்பியிருந்த இலங்கையில் அந்நிய செலாவணி இருப்பு வெகுவாக குறைந்துவிட்டது; இதனால் இலங்கை ரூபாயின் மதிப்பும் வேகமாக சரிந்திருக்கிறது.
அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்ததால் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதில் இலங்கை அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், நாட்டில் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. எனவே இவற்றின் விலைகளும் கிடுகிடுவென உயர்ந்துவருகிறது. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் இலங்கை மிகப்பெரிய உணவுப் பஞ்சத்தை சந்திக்கும் அபாயமான சூழல் ஏற்பட்டிருக்கிறது.
அரிசி, சர்க்கரை, பால், மாவு, வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற அத்தியாவசிய உணவுப்பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டதால் இலங்கையில் கடைகளின் முன்பு மக்கள் நீண்ட வரிசையில் நின்று பொருட்களை வாங்கும் சூழலும் உருவாகியுள்ளது. மேலும் பால் பவுடர், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உணவுப் பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாலும், நாட்டில் கொரோனா ஏற்படுத்திய வேலைவாய்ப்பின்மை காரணமாகவும் மக்கள் மிகப்பெரிய வாழ்வியல் சிக்கல்களுக்கும் ஆட்பட்டுள்ளனர்.
கடந்த வாரத்தில் ரூ. 500க்கு விற்ற பொருட்கள் இந்த வாரம் ரூ. 1,000 த்திற்கு விற்கப்படுகின்றன. 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையை லாஃப் நிறுவனம் 4,199 ரூபாவாக அதிகரித்துள்ளது.
மேலும் 5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 1,680 ரூபாவாக நிர்ணயித்துள்ளதுடன், 2 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் புதிய விலை 672 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயுவிற்கான விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், சமையல் எரிவாயுவிற்கான தட்டுப்பாடு தொடர்ந்தும் நிலவி வருகின்றது. பலர் நாள் முழுக்க வரிசையில் நின்றாலும் சமையல் எரிவாயு கிடைக்காமல் ஏமாற்றத்துடனே திரும்புகின்றனர்.
இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது. அமெரிக்க டாலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பு 320 ஆக உயர்ந்து விட்டது. இதனால் எந்த பொருளை வாங்க வேண்டும் என்றாலும் மிக அதிகமான விலை கொடுத்து தான் வாங்க வேண்டிய சூழலில் இலங்கை மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
உணவகங்களில் பால் தேநீர் 100 ரூபாவை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.ஒரு கிலோகிராம் பால்மா பாக்கெட் ஒன்றின் புதிய விலை 1945 ரூபா என்பதுடன், 400 கிராம் பால்மா பாக்கெட் ஒன்றின் புதிய விலை 790 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உளுந்து வடை 80 ரூபாய். ஒரு மூட்டை மாவு இன்றைக்கு 9250 ரூபாய். சீனி 8000 ரூபாய் என கடுமையான விலை உயர்வால் 90% உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.
இது குறித்து சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த இலங்கை வாசி ஒருவர் ''எந்த பொருளை எடுத்தாலும், விலை தான். 800 ரூபாவிற்கு இருந்த ஒரு கிலோ சீரகம், இன்று 1800 ரூபா. பெருஞ்சீரகம் 600க்கு இருந்தது, 1500 ரூபா. திராட்சை ஒரு கிலோ 1700 ரூபா 1600 ரூபாய். அரிசி விலை 100, பெரிய வெங்காயம் ரூ.400, முட்டை ஒன்றின் விலை ரூ,36, கோழி இறைச்சி விலை ரூ.1000 என்ற அளவில் விற்கப்படுகிறது. மைதா மாவு ஒரு மூடை ரூ.9250, சர்க்கரை ரூ.8000 ஆக உயர்ந்துள்ளது.இப்படி எல்லாமே விலை அதிகம். 500 ரூபாவிற்கு இருந்த காய்ந்த கொச்சிக்காய் (காய்ந்த மிளகாய்) 1100, 1200 ரூபா. சாதாரண மக்கள் எல்லாம் சாகுற நிலைமை தான்" என குறிப்பிட்டார்.
இத்தகைய பஞ்சமான சூழலில் தங்களின் உயிரை காத்துக் கொள்ள அண்டை நாடுகளில் மக்கள் தஞ்சம் புகுவது சர்வதேச அளவில் நடைபெறும் நிகழ்வாகவே உள்ளது. இந்நிலையில் இலங்கையின் அண்டை நாடான இந்தியாவுக்கு அகதிகளாக மக்கள் வரும் வாய்ப்பு இருப்பதால் இலங்கையின் அருகேயுள்ள ராமேஸ்வரம், தூத்துக்குடி, திருச்செந்தூர், கன்னியாகுமரி உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் கடலோர காவல் படையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தனுஷ்கோடி அருகே 3ம் மணல்திட்டு பகுதியில் 3 குழந்தைகளுடன் இலங்கையைச் சேர்ந்த 6 பேரை கடலோர காவல்படையினர் மீட்டுள்ளனர். அத்தியாசிய பொருட்கள் கூட வாங்க முடியாத நிலை இலங்கையில் உள்ளதால் அங்கிருந்து இந்தியாவிற்கு வந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து வரும் நாட்களில் பஞ்சம் பிழைக்க இன்னும் பலர் தமிழ்நாட்டுக்கு வரலாம் என்பதால் தனுஷ்கோடி பகுதியில் 13 மணல் திட்டு பகுதி உள்ளிட்ட தமிழகத்தின் கடலோட மாவட்டங்களில், கடலோர காவல் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
- அஹமத்