மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வரி தொடர்பாக எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை. மாறாக, 5ஜி ஏலம் நடக்கும், கார்ப்பரேட்டுகளுக்கான கூடுதல் வரி 12%-இருந்து 7% ஆகக் குறையும், டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும்; அதற்கு 30% வரி விதிக்கப்படும் போன்ற அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அதேபோல ஏழைகள், நடுத்தர மக்கள் வாங்கும் குடைகளுக்கு வரி உயர்வு, பணக்காரர்கள் வாங்கும் வைரத்திற்கு வரி குறைப்பு என பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
இது யாருக்கான பட்ஜெட்? ஏழைகளுக்காக பணக்காரர்களுக்கா என நெட்டிசன்களும் எதிர்க்கட்சித் தலைவர்களும் கேள்வியெழுப்பியுள்ளனர். அந்த வகையில் ஒவ்வொரு பட்ஜெட் தாக்கலின்போதும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் கருத்து முக்கியவத்துவம் பெறும். ஏனெனில் அவரும் பல பட்ஜெட்டுகளை தாக்கல் செய்திருக்கிறார். இந்நிலையில் பட்ஜெட் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்
"அடுத்த 25 ஆண்டுகளுக்கான திட்டத்தை சுட்டி காட்டினார் நிதியமைச்சர். மத்திய அரசுக்கு தற்போதைய நிகழ்காலத்தை பற்றி யோசிக்க மறந்துவிட்டது போல இருக்கிறது. ஒரு மோசமான நிதியமைச்சரால் வாசிக்கப்பட்ட முதலாளித்துவ பட்ஜெட் உரை இதுதான். ஏழை எளிய நடுத்தர மக்களின் நலனுக்காக அறிவிக்கப்பட்ட அனைத்து மானியங்களும் தற்போது குறைக்கப்பட்டுள்ளன.
மத்திய பட்ஜெட்டில் வரி சலுகை குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஜி.எஸ்.டி வருமான வரி சலுகைகள் இல்லாமல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் முன்வரவில்லை. பணவீக்கத்தை கட்டுப்படுத்தவோ விலைவாசி உயர்வை குறைக்கவோ நடவடிக்கை இல்லை. சிறு குறு நடுத்தர தொழில்களை மீட்டெடுக்கும் வகையில் எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை. ஏழைகள் என்ற வார்த்தை பட்ஜெட்டில் 2 முறை இடம்பெற்றிருந்தது. நாட்டில் ஏழை மக்களும் இருக்கிறார்கள் என்பதை தற்போது தான் நிதியமைச்சர் உணர்ந்துள்ளார். ஏழைகளை மறக்காமல் இருந்ததற்கு நன்றி தெரிவிக்கிறேன்.
நாட்டில் அதிகரித்து வரும் ஊட்டச்சத்து குறைபாட்டை சரி செய்ய ஏதுவாக எந்த திட்டமும் அறிவிக்கவில்லை. விவசாயம் மற்றும் அதனை சார்ந்த அனைத்து துறைகளுக்கும் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. வட்டியில்லா கடன், சுருக்கமான உரையை தவிர வேறெதுவும் குறிப்பிடும் படி இதில் எதுவும் இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.