இது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :-
தூத்துக்குடி மாவட்டத்தில் 19.02.2022 அன்று நடைபெற்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 22.02.2022 அன்று மாவட்டத்திலுள்ள 9 வாக்கு எண்ணிக்கை மையங்களில் நடைபெறவுள்ளது. அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு வாக்கு எண்ணிக்கை காலை 8.00 மணிக்கு தொடங்கப்படும். முதலில் தபால் வாக்குகள் வேட்பாளர்/ முகவர்கள் முன்னிலையில் வார்டு வாரியாக பிரிக்கப்பட்டு, செல்லத்தக்க ஒட்டுகள் மற்றும் செல்லாத ஒட்டுகள் பிரித்தெடுக்கப்பட்டு அனைத்து வார்டுகளுக்கும் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
தூத்துக்குடி மாநகராட்சியில் 11 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை 30 மேசைகளில் எண்ணப்பட உள்ளது எனவும் அதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் வார்டு வாரியாக எண்ணப்பட்டு, தபால் ஓட்டு எண்ணிக்கை விபரங்களுடன் சேர்த்து தேர்தல் முடிவுகள் தேர்தல் நடத்தும் அலுவலரால் அறிவிக்கப்படும்.
இதனையடுத்து காலை 8:30 மணியளவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் வார்டு வாரியாக எண்ணப்படும். வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வேட்பாளர், வேட்பாளரின் முகவர் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் தேர்தல் நடத்தும் அலுவலரால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
ஆனால், வாக்குகள் எண்ணும் அறைக்குள் வேட்பாளர்/முகவரி/வாக்கு எண்ணிக்கை முகவர் ஆகியோர்களில் எவரேனும் ஒருவர் மட்டுமே ஒரு சமயத்தில் அனுமதிக்கப்படுவர். மற்ற வேட்பாளர் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கு காத்திருப்பறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணும் மையத்திற்குள் சட்டமன்ற உறுப்பினர்களோ, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கோ அனுமதி இல்லை. வாக்கு எண்ணும் மையத்திற்குள் வாகனங்களுக்கு அனுமதி இல்லை. வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கைப்பேசி கொண்டு செல்ல அனுமதி இல்லை, மேலும், பென்சில், நோட்டு மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர்.
வாக்கு எண்ணும் அறைக்குள் படம் எடுக்க செய்தியாளர்களுக்கு அனுமதி கிடையாது. செய்தி மற்றும் ஊடகவியலாளர்களுக்கு தனியாக ஒரு அறை ஒதுக்கப்பட்டு நிகழ்வுகள் உடனுக்குடன் தெரிவிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பொது இடங்களில் பட்டாசு வெடிக்க தடை செய்யப்பட்டுள்ளது. ஒரு வார்டு வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன், சம்பந்தப்பட்ட வேட்பாளர் மற்றும் முகவர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்தினை விட்டு வெளியேறிட வேண்டும். வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அமைதியான முறையில் வெற்றி கொண்டாட்டம் கொண்டாடிட தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர்/மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.கி.செந்தில்ராஜ், வேண்டுகோள் விடுத்துள்ளார்.