நம்பியூரில் ஆடுகளை கடித்து குதறிய சிறுத்தையை பிடிக்க கூண்டு அமைத்து கண்காணிக்கும் வனத்துறையினர்

 கடந்த வாரத்தில் ஈரோடு - திருப்பூர் மாவட்ட எல்லையான பாப்பங்குளம் கிராமத்தில் சிறுத்தை ஒன்று புகுந்து இரண்டு பேரை கடித்து குதறியது. பின்னர் அங்கிருந்து தப்பித்த சிறுத்தை  5 நாட்களில் 7 பேரை கடித்து காயப்படுத்தி திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் பதட்டத்தை உருவாக்கியது. ஒரு வழியாக வனத்துறையினர் நீண்ட போராட்டத்துக்கு பின்னர் அந்த சிறுத்தையை பிடித்து காட்டுக்குள் கொண்டு போய் விட்டனர். 

இந்த செய்தி ஓய்வதற்குள் அடுத்ததாக ஈரோடு மாவட்டத்தில் நம்பியூர் பகுதியில் ஒரு மர்ம விலங்கு 3 ஆடுகளை கடித்து குதறியது. 

நம்பியூர் காந்திபுரம் வடக்குப் பகுதியைச் சேர்ந்த கன்னியம்மாள் வளர்த்து வந்த மூன்று ஆடுகளை இன்று மர்ம விலங்கு தாக்கி உயிரிழந்தது.

காலை ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்வதற்காக வந்து பார்த்தபோது ஆடுகள் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த கன்னியம்மாள் உடனடியாக நம்பியூர் காவல்துறை மற்றும் வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் அளித்தார். வனச்சரகர் கணேஷ்பாண்டியன் தலைமையில் குழு அமைத்து தற்போது அப்பகுதியில் தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. 

அங்கு உள்ள ஒரு காமிராவில் பாய்ந்து செல்லும் சிறுத்தை உருவம் பதிவாகி உள்ளது.

சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் மாலை 5.30 மணிக்கும் மேல் வெளியே சுற்ற வேண்டாம் என வனத்துறை மற்றும் நம்பியூர் பேருராட்சி சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

சிறுத்தையை பிடிக்க கூண்டு கொண்டு வந்து நிறுவ உள்ளனர். மேலும் இரவெல்லாம் வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சிறுத்தை இருக்கும் பகுதி என ஊர்ஜிதப்படுத்தப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

எனவே நம்பியூர் பகுதி வாழ் மக்களே சிறுத்தை சிக்கும் வரை கவனமாக இருங்க..

- மாரிச்சாமி, முகில்


Previous Post Next Post