நாடாளுமன்றத்தில் புரட்சிகர உரையாற்றிய ராகுல் காந்திக்கு தமிழக மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், இளைஞர்களுக்கு வேலையின்மை, வெளியுறவு கொள்கை தோல்வி உள்ளிட்டவை குறித்து பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தமிழகத்தை பாஜகவால் ஒருபோது ஆட்சி செய்ய முடியாது எனவும் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கருத்தை அழுத்தமாக வெளிப்படுத்தி, நாடாளுமன்றத்தில் நீங்கள் ஆற்றிய புரட்சிகர உரைக்கு, அனைத்துத் தமிழர்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சுயமரியாதையை மதிக்கும் தனித்துவமான கலாச்சார மற்றும் அரசியல் வேர்களில் தங்கியிருக்கும் தமிழர்களுக்கு, நாடாளுமன்றத்தில் நீங்கள் குரல் கொடுத்திருக்கிறீர்கள் எனத் தெரிவித்துள்ளார்.