வடமதுரையில் கத்தியால் குளியலறைக்குள் கழுத்தறுத்து தற்கொலை செய்து செய்து கொண்ட தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மாணவி வழக்கு விசாரணையில் மருத்துவ மேற்படிப்பு படிக்க சொன்னதால் மாணவி தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரனையில் தெரிய வந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அண்ணா நகரை சேர்ந்த தம்பதி பால்ராஜ் - அகிலா. இவர்களது மகள் நிவேதா (22) தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரியில், நிவேதா எம்பிபிஎஸ் இறுதியாண்டு படித்து வந்தார். உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு நிவேதா விடுப்பில் வடமதுரைக்கு வந்தார். நேற்று முன்தினம் மாலை பெற்றோர் வெளியில் சென்று விட்டனர். வீட்டில் நிவேதா, அவரது தம்பி மட்டும் இருந்தனர்.
அப்போது குளியலறைக்குள் சென்ற நிவேதா, கத்தியால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு குளியலறைக்குச் சென்று பார்த்த அவரது தம்பி, ரத்த வெள்ளத்தில் கிடந்த நிவேதாவை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் நிவேதாவை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் நிவேதா வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நிவேதா தந்தை பால்ராஜ் அளித்த புகாரின் பேரில் வடமதுரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், மருத்துவ படிப்பு இறுதியாண்டு படித்து வந்த நிவேதாவிடம் மருத்துவ மேற்படிப்பு படிக்க அவரது பெற்றோர் கூறியுள்ளனர். மருத்துவ இறுதியாண்டு படிப்பு படிக்கவே மிகவும் கஷ்டமாக உள்ளது எனவும், இதில் தந்தை மருத்துவ மேற்படிப்பு படிக்க சொல்கிறார் என தனது உறவினர்களிடம் நிவேதா புலம்பியுள்ளது தெரிய வந்துள்ளது. இதுகுறித்தும் தந்தை பால்ராஜ் போலீசில் புகாரளித்துள்ளார்.