மக்களுக்கு அல்வா கொடுக்கும் ஆட்சிதான் திமுக ஆட்சி என கோவில்பட்டியில் வேட்பாளர்களுடன் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூஎம்.எல்.ஏ பேசினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லியம்மன் கோயில் அருகே அதிமுக நகர்மன்ற தேர்தல் அலுவலகம் திறப்பு விழா மற்றும் வேட்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ தலைமை வகித்தார்.
விளாத்திகுளம் முன்னாள் எம்எல்ஏ சின்னப்பன் முன்னிலை வகித்தார். நகரச் செயலாளர் விஜயபாண்டியன் வரவேற்றார். தமாகா மாவட்ட தலைவர் கதிர்வேல் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார்.
கூட்டத்தில் நகராட்சியில் உள்ள 36 வார்டு வேட்பாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கடம்பூர் ராஜூ எம்எல்ஏ ஆலோசனைகள் வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், கோவில்பட்டி நகராட்சியில் 36 வார்டுகளுக்கு வரும் 19ம்தேதி தேர்தல் நடக்கிறது. நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து வெற்றிக்கு பாடுபட வேண்டும். கோவில்பட்டி நகரில் குடிநீர் பிரச்னையை தீர்க்க மக்களின் கனவு திட்டமான 2வது பைப்லைன் திட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது.
இவை தவிர தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகம், ஆர்டிஓ அலுவலகம், அரசு மருத்துவமனை விரிவாக்கம், மருத்துவமனைக்கு தேவையான நவீன கருவிகள், உலகத்தரம் வாய்ந்த செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானம், கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு, சாலை வசதி போன்ற எண்ணற்ற திட்டங்களை அதிமுக ஆட்சியில் கொண்டு வந்தோம்.
தற்போது கோவில்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம், தொழிற்பூங்கா அமைக்க வலியுறுத்தி உள்ளோம். எனவே அதிமுக அரசின் 10 ஆண்டு கால சாதனைகளை மக்களிடம் நேரடியாகச் சென்று எடுத்துக்கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்.
கோவில்பட்டி நகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் வெற்றி பெறுவதற்கு நிர்வாகிகள் அனைவரும் இரவு, பகல் பாராமல் உழைக்க வேண்டும்.மக்களுக்கு அல்வா கொடுக்கும் ஆட்சிதான் திமுக ஆட்சி என இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட ஒன்றியக்குழு தலைவி சத்யா, பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், நகர மாணவரணி செயலாளர் விநாயகாமுருகன், ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் பழனிச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜ், அய்யாத்துரை பாண்டியன், தூத்துக்குடி ஹென்றி தாமஸ்,
அவைத்தலைவர் எம்.கே.பெருமாள், ஆவின் பால் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், அம்மா பேரவை பொருளாளர் அம்பிகா வேலுமணி, நகர அம்மா பேரவை செயலாளர் ஆபிரகாம் அய்யாத்துரை, வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் சிவபெருமாள், வக்கீல் சங்கர்,
அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி இணைச் செயலாளர் செண்பகமூர்த்தி, நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு கவியரசன், வர்த்தக அணி இணைச் செயலாளர் ராமர், ஓட்டப்பிடாரம் முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி,
அம்மா பேரவை இணைச் செயலாளர் நீலகண்டன், ஈ.பி.கணேசன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், தமாகா நகர தலைவர் ராஜகோபால், ஆழ்வார்சாமி, கனி, செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.