இறந்தவர்களுக்கு அடையாளச் சான்றிதழ் வழங்கியதற்காக, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உதவிப் பேராசிரியர், மற்றும் தனியார் மருத்துவர் ஆகியோரின் உரிமத்தை தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் ரத்து செய்துள்ளது. தனியார் மருத்துவரின் உரிமம் மூன்று மாதங்களுக்கு மட்டுமே ரத்து செய்யப்பட்ட நிலையில், அரசு மருத்துவர் இரண்டு ஆண்டுகள் மருத்துவம் செய்ய முடியாது என மருத்துவ கவுன்சில் தடை விதித்துள்ளது.
தனியார் மருத்துவரான கே.பத்ரி பிரசாத், அக்டோபர் 16, 2019 அன்று இறந்த சபிதா மற்றும் ஜூலை 18, 2020 அன்று இறந்த ஷைலஜா ஜெயசூர்யா என அடையாளம் காணப்பட்ட இரண்டு இறந்த நபர்களுக்கு ஓசூரில் செப்டம்பர் 7, 2020 அன்று சான்றிதழ்களை வழங்கியுள்ளார், ஆனால்
குறிப்பிட்ட தேதியில் இரு பெண்களும் உயிருடன் இருப்பதாக பெங்களூரைச் சேர்ந்த புகார்தாரர் ஆர்.வினோத் குமார் அவர்களின் புகைப்படங்களையும் இனைத்து புகார் கூறியதையடுத்து தனியார் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கவுன்சில் தலைவர் கே.செந்தில் கூறுகையில், "அடையாளத்தை கண்டறியாமல் இருப்பது மருத்துவரின் அலட்சியம், ஆதலால் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் மருத்துவ நெறிமுறைகள் (தொழில்முறை நடத்தை, நெறிமுறைகள் மற்றும் நெறிமுறைகள்) விதிமுறைகள், 2003 இன் ஒழுங்குமுறை 7.7 இன் படி, இது தவறான நடத்தையாகும் என்று குறிப்பிட்டார்.
இரண்டாவது சம்பவத்தில், வேலூர் மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியரான சாந்தினி, 2015 ஜூலை 2-ஆம் தேதி இறந்த ஒருவருக்கு, ஜனவரி 10, 2018 அன்று அடையாளச் சான்றிதழை வழங்கியுள்ளார். டாக்டர் சாந்தினியின் மாமனார், கிருஷ்ணகுமாரின் சொத்தை தன் பெயருக்கு மாற்ற அடையாளச் சான்றிதழை வழங்குமாறு கேட்டிருந்தார்.
இந்த வழக்கில் புகார் அளித்தவர் கிருஷ்ணகுமாரின் மனைவி சுதா கூறுகையில் “ மருத்துவர் சாந்தினி அறியாமல் சான்றிதழில் கையெழுத்திட்டார் என்று கூற முடியாது. இறந்த நபரின் சொத்தை அபகரிக்கும் நோக்கில் வேண்டுமென்றே நடந்த திட்டமிட்ட செயல் என்று குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து டாக்டர் சாந்தினி, விளக்கமளிக்கையில், அவரது மாமனாரின் உடன்பிறப்புகள் உயிருடன் இருப்பதாகவும், அவர்கள் அனைவரும் நலமுடனும், உயிருடனும் இருக்கும்போது சொத்து மாற்றப்பட வேண்டும் என்றும் அவரது மாமனார் தன்னிடம் கூறியதால் அவருடைய வார்த்தையை ஏற்றுக்கொண்டு சான்றிதழில் கையெழுத்திட்டதாக கவுன்சிலில் விளக்கமளித்துள்ளார். விளக்கம் திருப்திகரமாக இல்லை என ஏற்க மறுத்த கவுன்சில்,
"மருத்துவச் சான்றிதழ்கள் சட்டப்பூர்வ ஆவணங்கள் மற்றும் பதிவுசெய்யப்பட்ட மருத்துவப் பயிற்சியாளர்களால் சான்றளிக்கப்பட்ட அறிக்கைகள் தெளிவான மற்றும் பொருத்தமான சான்றுகளின் அடிப்படையில் இருக்க வேண்டும்" என்று கவுன்சில் தனது உத்தரவில் கூறியுள்ளது.
கவுன்சில் அவரது பயிற்சி உரிமையை இரண்டு ஆண்டுகளுக்கு ரத்து செய்தது. டிஎன்எம்சி மருத்துவப் பதிவேட்டில் இருந்து அவரது பெயரை நீக்கியது மட்டுமின்றி, அசல் பதிவுச் சான்றிதழை உடனடியாகச் சமர்ப்பிக்கும்படியும் கூறியுள்ளது.