திம்பம் இரவு நேர போக்குவரத்துக்கு தடை - ஈரோடு கலெக்டர் உத்தரவை திரும்பப் பெற கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்.!

 

சத்தியமங்கலம் :  திம்பம் மலைப்பாதையில் இரவு நேர வாகன போக்குவரத்து தடையால்  பாதிக்கப்பட்ட தாளவாடி மலைப்பகுதியில் உள்ள பழங்குடியின மக்கள் இந்த தடை  உத்தரவை கலெக்டர்  திரும்பப் பெறக் கோரி தீர்மானம்  நிறைவேற்றியுள்ளனர்.

இதுகுறித்து பழங்குடி இன மக்கள் கூறியதாவது: 2006ம்  ஆண்டு வன  உரிமைச்சட்டப்படி, ஆசனூர் மற்றும் சத்தியமங்கலம்  வனக்கோட்டங்களில் உள்ள பழங்குடியினர் கிராமங்களில் கிராம சபைகள்  அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றன.

திம்பம் மலைச்சாலையில் இரவுநேர  வாகனப்போக்குவரத்தை தடை விதித்து கலெக்டர்  அறிவித்த உத்தரவு இந்த  கிராம சபைகளை கலந்து கொள்ளாமல் தன்னிச்சையாக அறிவிக்கப்பட்ட ஒன்றாகும். வன உரிமைச்சட்டப்படி இதுசட்ட மீறலுமாகும். ஆகவே, கலெக்டரின் வன உரிமைச்சட்டத்திற்கு மாறான இந்த உத்தரவை திரும்ப பெற  வேண்டும் என பழங்குடியினர் கிராம சபைகள் தீர்மானங்களை நிறைவேற்றி வருகின்றன.

நேற்று  காலை ஜீரஹள்ளி வனச்சரகத்திற்குட்பட்ட சோளகர் தொட்டி, தாளவாடி  வனச்சரகத்திற்குட்பட்ட பாலப்படுகை, தலமலை வனச்சரகத்திற்குட்பட்ட ராமரணை,  காளிதிம்பம், மாவநத்தம் ஆகிய 5 பழங்குடியின கிராமங்களின் கிராம சபைகள்  கூடி தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன. தொடர்ந்து மற்ற கிராம சபைகளும் கூடவுள்ளன.

எங்கள் கிராமங்கள் வன ஆசனூர் மற்றும் சத்தியமங்கலம் வனக்கோட்டத்திற்கு உட்பட்டு அமைந்துள்ள வனப்பகுதி கிராமங்களாகும். வன உரிமைச்சட்டம் 2006ன் கீழ் எங்களது கிராமத்திற்கான கிராம சபா அமைக்கப்பட்டுள்ளது.

கோவை   பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை எங்களது கிராமத்திற்கான பொது போக்குவரத்து  பாதை. அந்த பாதை எங்கள் வனப்பகுதியில் அமைந்துள்ள பகுதியாகும். வன  உரிமைச் சட்டம் பிரிவு 3(1)(i) எங்கள் கிராம மக்களுக்கு சமூக வன வளங்கள்  பயன்பாடு மற்றும் பாதுகாத்தல் உரிமை வழங்கியுள்ளது. மேற்படி, சட்டம் பிரிவு 5  சமூக வன  உரிமைகளையும், வன வளத்தை  பாதுகாக்க, மேம்படுத்த எங்களது கிராம  சபாவிற்கு முழு அதிகாரம் வழங்கியுள்ளது. இந்நிலையில் ஈரோடு கலெக்டர் பார்வையில் குறிப்பிட்டுள்ள 2  அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

எங்கள் கிராம மக்கள் பண்ணாரி   காரப்பள்ளம் சாலையை  கடந்த 1920ம் ஆண்டு முதல் பயன்படுத்தி வருகிறோம். குறிப்பாக எங்கள்  கிராமத்தில் வசித்து வரும் மக்கள் அனைத்து விதமான அரசு நிர்வாகம், வங்கி, மருத்துவம், வணிகம் , விவசாயம் சார்ந்த இடுபொருட்கள் (உரம், மருந்து)  தேவைகளுக்காக கோவை, ஈரோடு, திருப்பூர், சாம்ராஜ்நகர் போன்ற  பகுதிகளுக்கு செல்வதற்கு பண்ணாரி   காரப்பள்ளம் சாலை மட்டுமே உள்ளது.  அதையே தொடர்ந்து பயன்படுத்தி வருகிறோம்.

இந்நிலையில் ஈரோடு கலெக்டர் எங்கள்  கிராம மக்களிடம் எவ்வித கலந்தாய்வோ, முன்னறிவிப்போ  இல்லாமல் 10.2.2022 முதல் பண்ணாரி  காரபள்ளம் சாலையில் இரவு நேர வாகன  போக்குவரத்திற்கு தடையை நடைமுறைப்படுத்தி உள்ளார். மேற்படி, போக்குவரத்து தடையின் காரணமாக எங்கள் கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாய விளைபொருட்களை சந்தைகளுக்கு உரிய நேரத்தில் கொண்டு செல்ல இயலாமல் விலை வீழ்ச்சி, காய்கறி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

சத்தியமங்கலம், சாம்ராஜ்நகர் மற்றும் அருகிலுள்ள நகரங்களுக்கு தினசரி கூலி  வேலைக்கு சென்று வருபவர்கள் இரவு நேர போக்குவரத்து தடையால் ஏற்பட்ட பகல்  நேர போக்குவரத்து நெரிசல் மற்றும் போக்குவரத்து  தடையால் வேலைக்கு செல்ல  இயலவில்லை. மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு உரிய நேரத்தில் செல்ல முடியவில்லை. கல்வி தடைபட்டுள்ளது.  பால், விவசாய இடு பொருட்களை பெறவோ, விற்பனை செய்யவோ இயலவில்லை. மருத்துவ வசதிகளுக்காக உரிய நேரத்தில் மருத்துவமனைகளுக்கு செல்ல இயலவில்லை.

அரசு அலுவலர்கள் பகலில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக உரிய  நேரத்தில் தங்கள் பணி இடங்களுக்கு வர இயலாததால் அரசு நிர்வாக செயல்பாடு  நிலை குலைந்துள்ளது.

எங்கள் பகுதி மக்கள் அன்றாட இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. வன  உரிமைச் சட்டம் 2006  ன் படி எங்கள் வனப்பகுதியில் போக்குவரத்தை தடை  செய்து உத்தரவிட ஈரோடு  கலெக்டருக்கு எவ்வித சட்ட பூர்வ உரிமையும்  இல்லை.

வனத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சமூக வன வளத்தினை பாதுகாக்கவும்,  மேம்படுத்தவும் கிராம சபாவிற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.எங்கள் கிராம  மக்களிடம் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக கலெக்டர்   பிறப்பித்துள்ள மேற்குறிப்பிட்ட 2 அறிவிப்புகளும் சட்டவிரோதமானது,   செல்லாத ஒன்றாகும்.

எனவே ஈரோடு கலெக்டர், எங்களது அடிப்படை  வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில்  பிறப்பிக்கப்பட்டுள்ள மேற்படி  உத்தரவுகள் ரத்து செய்தும், இரவு நேர வாகன போக்குவரத்திற்கு  விதிக்கப்பட்ட தடை உத்தரவினை திரும்பப்பெற உத்தரவிட வேண்டும் எனவும்  பழங்குடியினர் கிராமசபாக்களில்  தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம் எனக்  கூறினர்.

Erode Collector ,Thimbam Hill Road ,Grama ,Niladhari , Satyamangalam

Ahamed

Senior Journalist

Previous Post Next Post