2022-ம் ஆண்டுக்கான பட்ஜெட் இந்த நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் பட்ஜெட்’ என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்திருக்கிறார்.
2022-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இரண்டாவது நாளான இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதுவரை நான்கு முறை பட்ஜெட் தாக்கல் செய்திருக்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்த முறை பட்ஜெட் தாக்கல் செய்ய, குறைந்த நேரமே எடுத்துக்கொண்டார். இந்த பட்ஜெட் குறித்து பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துகளை முன்வைத்துவருகின்றனர்.
அந்த வகையில், பட்ஜெட் தொடர்பாக தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், `மத்திய அரசின் 2022-23-ம் ஆண்டுக்கான இந்த பட்ஜெட் நதிநீர் இணைப்பு, விவசாயத் துறைக்குக் குறைந்தபட்ச ஆதார விலைக்கான நிதி ஒதுக்கீடு, மக்களுக்கு வீடு வழங்கும் திட்டம், வீடுகளுக்குக் குடிநீர் இணைப்பு, நெடுஞ்சாலைத்துறை, 5 ஜி சேவை, 60 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் என்று நம் நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் வகையில் அமைந்திருக்கிறது. அ.தி.மு.க சார்பில் பிரதமர் மோடிக்கும், சிறப்பான முறையில் பட்ஜெட்டை வழங்கிய நிதிய்மைச்சருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.