அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பு - 37 முக்கிய கட்சியின் தலைவர்களுக்கு ஸ்டாலின் கடிதம்.!

அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பு என்ற அமைப்பை உருவாக்கி அதில் இணையுமாறு சோனியாகாந்தி, சரத்பவார், லல்லு பிரசாத் யாதவ், சந்திரபாபுநாயுடு, ஓபிஎஸ், உள்ளிட்ட நாட்டின் 37 முக்கிய கட்சிகளின் தலைவர்களுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.  

ஜனவரி 26 குடியரசு தினத்தன்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “அனைத்து மாநிலங்களில் இருந்தும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் தலைவர்கள்” பிரதிநிதித்துவத்துடன் ‘சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பு’ தொடங்க உள்ளதாக அறிவித்தார். சமூக நீதியைத் தேடுவதோடு, கூட்டாட்சியை அடைவதும் கூட்டமைப்பின் குறிக்கோளாக இருக்கும் என்று ஸ்டாலின் கூறினார்.

அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு, சமூகப் புரட்சிக் கூட்டணி, பூலே-அம்பேத்காரி கவுரவ்ஷாலி அவுர் ஆதர்ஷவாதி முஹிம், மற்றும் பிஎஸ்பி நிறுவனர் கன்ஷி ராமுடன் தொடர்புடைய பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை சமூகங்களின் பணியாளர்கள் கூட்டமைப்பு (அல்லது BAMCEF) போன்ற அமைப்புகளின் கீழ் தேசிய வலைதளத்தில் ஸ்டாலின் உரையாற்றினார்.

“அனைவருக்கும் அனைத்தும் என்பதே இந்தக் கூட்டமைப்புக்கு அடிப்படையாக இருக்கும். அடிக்கடி சந்தித்து சமூக நீதியை நிலைநாட்டுவோம்” என்று கூறிய ஸ்டாலின், திராவிட இயக்கம் தேசத்திற்கு அளித்த மிகப்பெரிய பரிசு சமூக நீதி என்றும் கூறினார்.

இந்நிலையில் இன்று அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பில்  இணையுமாறு நாட்டின் 37 முக்கிய கட்சிகளின் தலைவர்களுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்..

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில்... 

"கூட்டாட்சி மற்றும் சமூகநீதிக் கோட்பாடுகளை வென்றெடுக்க அரசியல் கட்சித் தலைவர்கள், குடிமைச் சமூகத்தின் உறுப்பினர்கள், ஒத்த சிந்தனையுள்ள தனிநபர்கள் ஆகிய அனைவரையும் ஒரு பொதுவான குடையின் கீழ் ஒன்றிணைய வேண்டும். சமூகநீதி என்பது அனைவருக்கும் சமமான பொருளாதார, அரசியல், சமூக உரிமைகளும் வாய்ப்புகளும் அமையவேண்டும் என்ற எண்ணம்தான்.

அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் என்பதை உறுதிசெய்வதன் வழியாகத்தான் நமது அரசியல் சட்டத்தை இயற்றியவர்கள் காண விரும்பிய சமத்துவச் சமுதாயத்தை கட்டியமைக்க முடியும். சமத்துவம், சுயமரியாதை மற்றும் சமூகநீதி ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டுள்ள நாம் அனைவரும் ஒன்றிணைந்தால்தான் பிரிவினையை எதிர்த்துப் போரிட முடியும். 

சமூகத்தின் பொது நீரோட்டத்தில் இருந்து விலக்கப்பட்டு நூற்றாண்டுகளாய் எதிர்கொண்ட அடக்குமுறையை உடைத்தெறிய வேண்டுமானால் பின்தங்கியவர்களுக்கு ஒவ்வொரு படியிலும் சில சிறப்புரிமைகள் தரப்பட வேண்டும். இந்த குறிக்கோள்களை அடைய, உண்மையாகவே மாநிலங்களாலான ஒன்றியமாக நாம் இணைந்து நிற்க வேண்டிய நேரம் இது. 

ஒவ்வொரு மாநிலத்திலும், வாய்ப்புக்கான கதவுகள் திறக்கப்படுவதற்காக ஒடுக்கப்பட்ட சமூகங்கள் ஆவலுடன் உள்ளன. ஆகவே, தங்கள் அமைப்பில் இருந்து இந்த அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்புக்கான பிரதிநிதிகளாகத் தக்க நபர்களை நியமிக்குமாறு அக்கறையுடன் கேட்டுக்கொள்கிறேன்"  இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


Ahamed

Senior Journalist

Previous Post Next Post