தூத்துக்குடி அருகே ரூ.30 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்- 8 பேர் கைது.!*



தூத்துக்குடி அருகே 30 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் - 8 பேரை கைது செய்து கியூ பிரிவு போலீசார் விசாரணை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் உள்ள வேம்பார் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதையடுத்து கியூ பிரிவு காவல் உதவி ஆய்வாளர் ஜீவமணி தர்மராஜ் தலைமையிலான போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு  வேம்பார் கடற்கரையில் இருந்து 5 கடல்மைல் தொலைவில் கடலுக்குள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 அப்போது சந்தேகப்படும் படியாக சென்ற படகு ஒன்றை சுற்றிவளைத்து சோதனை செய்ததில் ஐந்து பாலித்தீன் பைகளில் 10 கிலோ எடையுள்ள  கிரிஸ்டல் சிந்தடிக் எனும் போதை பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதன் மதிப்பு  30 கோடி ரூபாய் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. கியூ பிரிவு போலீசார் கிறிஸ்டல் சிந்தடிக் போதைப்பொருளை கைப்பற்றி கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய கீழ வைப்பாற்றை சேர்ந்த சிலுவை, வினிஸ்டன், கபிலன், சுபாஷ், அஸ்வின், சைமன், இருதய வாசு ஆகிய 8 பேரை கைது செய்து கியூ பிரிவு அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதிகளில் இருந்து இலங்கைக்கு அண்மைகாலமாக போதைப் பொருட்கள் அதிக அளவில் கடத்தப்பட்டு வருவதும் போலீசார் சுற்றி வளைத்து பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக வேம்பார் முதல் தருவைகுளம் வரையிலான கடல் பகுதியில்  கடலோர காவல் படை போலீசாரும், 

கியூ பிரிவு போலீசாரும் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியிருந்த போதிலும்  30 கோடி மதிப்பிலான போதைப்பொருள் வேம்பார் கடல் பகுதியில்  கைப்பற்றப்பட்ட சம்பவம் போலீஸ் வட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
Previous Post Next Post