கோவில்பட்டி நகராட்சியில் கடந்த 19-ம் தேதி நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 36 வார்டுகளுக்கு மொத்தம் 85 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணும் மையத்தில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இங்கு 12 மேஜைகள் அமைக்கப்பட்டு, 3 சுற்றுகளாக நடந்தது.
தேர்தல் நடத்தும் அலுவலர் ஓ. ராஜாராம் தலைமையில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மணிகண்டன், பிரதான் பாபு, ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்து வரப்பட்டன. முதலில் தபால் வாக்குகள் பிரிக்கப்பட்டன. இதில் மொத்தம் 140 வாக்குகள் பதிவாகி இருந்தன. அதைத்தொடர்ந்து வாக்கு எண்ணும் பணி தொடங்கியது.
இதில், 1 முதல் 12, 13 முதல் 24, 25 முதல் 36 வார்டுகளுக்காக வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் 1-வது வார்டில் திமுக வேட்பாளர் பெ.கனகலட்சுமி 1249 வாக்குகள், 2-வது வார்டில் திமுக வேட்பாளர் ச.செண்பகவல்லி 649, 3-வது வார்டில் அமமுக வேட்பாளர் மு.கருப்பசாமி 437, 4-வது வார்டில் திமுக வேட்பாளர் கு.சித்ரா 756, 5-வது சுயேச்சை வேட்பாளர் ரா.லவராஜா 1127, 6-வது வார்டில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் என்.முத்துராஜ் 765, 7-வது வார்டில் திமுக வேட்பாளர் அ.சண்முகவேல் 565, 8-வது வார்டில் திமுக வேட்பாளர் சுரேஷ் 520, 9-வது வார்டில் திமுக வேட்பாளர் சை. மகபூப் ஜெரினா 746, 10-வது வார்டில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் க.முத்துலட்சுமி 319 வாக்குகள், 11-வது வார்டில் மதிமுக வேட்பாளர் சீ.ரமேஷ் 845, 12-வது வார்டில் அதிமுக வேட்பாளர் ப.உமா மகேஸ்வரி 708 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர்.
13-வது வார்டில் திமுக வேட்பாளர் ம. சித்ராதேவி 1081 வாக்குகள், 14-வது வார்டில் திமுக வேட்பாளர் தவமணி 792, 15-வது வார்டில் மதிமுக வேட்பாளர் சோ.மணிமாலா 1067, 16-வது வார்டில் திமுக வேட்பாளர் கா.கருணாநிதி 914, 17-வது வார்டில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் அ.சரோஜா 418, 18-வது வார்டில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் ல.விஜயா 634, 19-வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் மா.விஜயன் 687, 20-வது வார்டில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் விஜயகுமார் 546, 21-வது வார்டில் திமுக வேட்பாளர் தா.உலகராணி 417, 22-வது வார்டில் திமுக வேட்பாளர் அ. ஜாஸ்மின் லூர்து மேரி 780, 23-வது வார்டு சுயேச்சை வேட்பாளர் சி. சுதா குமாரி 548, 24-வது வார்டு அதிமுக வேட்பாளர் வ. செண்பக மூர்த்தி 706 ஆகியோர் வெற்றி பெற்றனர்.
இதேபோல், 25-வது வார்டில் திமுக வேட்பாளர் மாரியம்மாள் 595, 26-வது வார்டு அதிமுக வேட்பாளர் எம்.வள்ளியம்மாள் 229, 27-வது வார்டில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் ல.ஜோதிபாசு 336, 28-வது வார்டில் திமுக வேட்பாளர் பூ.முத்துலட்சுமி 1313, 29-வது வார்டு திமுக வேட்பாளர் கருப்பசாமி 471, 30-வது வார்டில் திமுக வேட்பாளர் ம.புவனேஸ்வரி 589, 31-வது வார்டில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் கே.சீனிவாசன் 475, 32-வது வார்டில் அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.வி. கவியரசன் 648, 33-வது வார்டு திமுக வேட்பாளர் வே. சண்முகராஜ் 843, 34-வது வார்டு திமுக வேட்பாளர் ரா. ராமர் 658, 35-வது வார்டு திமுக வேட்பாளர் தா. ஏஞ்சலா 735, 36-வது வார்டு திமுக வேட்பாளர் மா. கனகராஜ் 613 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர்.
வாக்கு எண்ணும் பணிகளை கோட்டாட்சியர் சங்கரநாராயணன் ஆய்வு செய்தார். வெற்றி பெற்றவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் ஓ.ராஜாராம் சான்றிதழ் வழங்கினார்.
36 வார்டுகளில் 19 இடங்களில் திமுகவும், மார்க்சிஸ்ட் 5, மதிமுக 2, அதிமுக 4, இந்திய கம்யூனிஸ்ட், அமமுக, பாஜக ஆகியவை தலா 1, சுயேச்சை 3 ஆகியவை தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. இதில் திமுக கூட்டணி 27 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.
இதையொட்டி வாக்கு எண்ணும் மையம், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் டி.எஸ்.பி. உதயசூரியன் தலைமையில் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஒரு வாக்கில் வெற்றி
10 வது வார்டில் வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் வேட்பாளர் முத்துலட்சுமி 317 வாக்குகள் பெற்றிருந்தார். அவருக்கு தபால் வாக்குகள் 2 கிடைத்தன. இதனால் 319 வாக்குகள் பெற்றிருந்தார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட அமமுக காளீஸ்வரிக்கு 318 வாக்குகள் கிடைத்தன. அவருக்கு தபால் வாக்குகள் எதுவும் கிடைக்கவில்லை. அதேபோல் இதை வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரான மாரீஸ்வரிக்கு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 271, வாழ்வார்க்கு ஒன்றும் என 278 வாக்குகள் பெற்றிருந்தார். இதனால் மார்க்சிஸ்ட் வேட்பாளர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அமமுக வேட்பாளரை விட ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
25 ஆண்டுகளுக்கு பின்னர் திமுக
கோவில்பட்டி நகராட்சியில் 1996-ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக வேட்பாளர் பெரியநாயகம் தமிழரசன் நேரடியாக சேர்மன் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் பின்னர் 2006-ல் நடந்த நகராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த மார்க்சிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. தற்போது 25 ஆண்டுகளுக்குப் பின்னர் திமுக 19 இடங்களில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.