அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி - 3, 4 தேதிகளில் தமிழகத்திற்க்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம்


தென் கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, வருகிற 3,4 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் சில மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வறண்ட வானிலையும், நாளைய தினம் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

3-ந் தேதி தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டையில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கையில் கனமழையும் பெய்யக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 4-ந் தேதியும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், டெல்டா மாவட்டங்களில் கனமழையும்  பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் மட்டுமே காணப்படும், மழைக்கு வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால், 5 நாட்களுக்கு மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post