ராமநாதபுரத்தில் பல கோடி மதிப்புள்ள தொன்மையான சிலைகளை கடத்த முயன்ற பாஜக பிரமுகர், 2 காவலர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த முக்கியபுள்ளி ஒருவர் தொன்மையான உலோக சிலைகளை கடலில் படகு மூலமாக வெளிநாடுகளுக்கு கடத்த உள்ளார் என்ற தகவல் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது. இதன் பேரில் நான்கு காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் ராமநாதபுரம் முதுகளத்தூர் பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான அலெக்ஸ்(எ) அலெக்சாண்டர்(52) தொன்மையான சிலைகள் வைத்திருப்பதும் அவர் அதனை ரூபாய் ஏழு கோடி மதிப்பில் வெளிநாட்டில் உள்ள தொழிலதிபர் ஒருவருக்கு கடத்த முற்படுவதும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தெரியவந்தது.
இதனால், அவரது வீட்டுக்கு சென்ற போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் ராமநாதபுரம் மாவட்டம் கூரிசேத்தனார் அய்யனார் கோவிலின் பின்புறம் உள்ள கால்வாயில் 7 சிலைகளையும் அலெக்ஸாண்டர் மறைத்து வைத்திருந்தத்து கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து கால்வாயில் மறைத்து வைத்திருந்த 2 அடி உயரமுள்ள நடராஜர் சிலை, 1.5 அடி உயரமுள்ள நாககன்னி சிலை, 1 அடி உயரமுள்ள காளி சிலை, 3/4 அடி உயரமுள்ள முருகன் சிலை, 1/2 அடி உயர விநாயகர் சிலை, 1/2 நாக தேவதை சிலை ஆகிய 7 தொன்மை வாய்ந்த சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்டனர்.
மேலும், அலெக்ஸாண்டரை கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது, அவர் ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் என்பது தெரியவந்தது. மேலும், அருப்புக்கோட்டை காவல் நிலைய காவலர் இளங்குமரன், திண்டுக்கல் ஆயுதப்படை காவலர் நாகநாகேந்திரன்(37), மற்றும் காவலர் இளங்குமரனின் நண்பரான விருதுநகரைச் சேர்ந்த கருப்புசாமி(35) ஆகியோரிடமிருந்து சிலைகளை பா.ஜ.க பிரமுகர் அலெக்சாண்டர் பெற்றுள்ளார் என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து அருப்புக்கோட்டை காவல் நிலைய காவலர் இளங்குமரன், திண்டுக்கல் ஆயுதப்படை காவலர் நாகநாகேந்திரன் மற்றும் கருப்புசாமி ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள ஒரு மலைப் பகுதி அடிவாரத்தில் ஒரு நபர் தொன்மையான சிலைகளை வைத்து இருப்பதாக, கருப்புசாமி தன் நண்பரான காவலர் இளங்குமரனிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அவரிடம் குறைந்த விலைக்கு சிலைகளைப் பெற்று அதிக விலைக்கு விற்பனை செய்து கொள்ளலாம் என திட்டம் தீட்டி அருப்புக்கோட்டை காவல் நிலைய காவலர் இளங்குமரன், திண்டுக்கல் ஆயுதப்படை காவலர் நாகநாகேந்திரன், கருப்புசாமி மற்றும் அவர்களது நண்பர்களான ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ், விருதுநகரைச் சேர்ந்த கணேசன் ஆகியோர் எடப்பாடி அருகே உள்ள மலையடிவார பகுதிக்கு சென்றுள்ளனர்.
அங்கு சென்று சிலைகளைப் பார்த்ததும் தாங்கள் அனைவரும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் எனக்கூறியுள்ளனர். மேலும், சிலைகளை கொடுத்துவிட்டால் உங்களை கைது செய்ய மாட்டோம் என அவர்களை மிரட்டி சிலைகளை பறித்துக் கொண்டு வந்துள்ளனர். பின்னர், இவர்களுக்கு பழக்கமான ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளரான அலெக்ஸாண்டர், தன்னிடம் புராதன சின்னங்கள் மற்றும் சிலைகளை அதிக விலை கொடுத்து வாங்கும் தொழிலதிபர்கள் இருப்பதாக கூறியுள்ளார்.
மேலும், சிலைகளை விற்றுக்கொடுத்தால் 40 சதவிகித பணம் தனக்கு எனவும் மீதமுள்ள பணத்தை நீங்கள் பங்கு போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் அலெக்சாண்டர் கூறி அதன்பேரில் சிலைகளை வாங்கி வைத்துக் கொண்டுள்ளார் என்பதும் இரண்டு புரோக்கர்கள் மூலம் வெளிநாட்டிலுள்ள தொழிலதிபருக்கு இன்னும் சில தினங்களில் அலெக்சாண்டர் ரூ.5 கோடிக்கு சிலைகளை கடத்தவிருந்ததும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தெரியவந்தது.
மேலும், போலீசாரின் விசாரணையில் மதுரை நிகழ்ச்சி ஒன்றில் பாதுகாப்பு பணியின்போது அருப்புக்கோட்டை காவல் நிலைய காவலர் இளங்குமரனும் திண்டுக்கல் ஆயுதப்படை காவலரான நாதநாகேந்திரனும் நண்பர்களாகி உள்ளனர். காவல்துறையில் இருந்தால் அதிகமாக சம்பாதிக்க முடியாது எனக்கூறி காவல்துறை வேலையைப் பயன்படுத்தி குறுக்கு வழியில் அதிகமாக சம்பாதிக்கலாம் எனவும் இவர்கள் திட்டம் போட்டதும் தெரியவந்தது.
குறிப்பாக, அருப்புக்கோட்டை காவல் நிலைய காவலர் இளங்குமரன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு வீட்டை உடைத்து ரூ.48 லட்சம் திருடிய வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் என்பதும் அதனால் தற்போது இளங்குமரன் பணியிடை நீக்கத்தில் இருப்பதும் தெரியவந்தது. மேலும், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இளங்குமரன் சிறையிலிருந்து நிபந்தனை ஜாமினில் வெளியே வந்துள்ளார் என்பதும் போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் காவலர்களான இளங்குமரன், நாகநாகேந்திரன் மற்றும் பாஜக பிரமுகர் அலெக்சாண்டர் ஆகியோர் இணைந்து வேறு சில இடங்களில் சிலைகளை வாங்கி விற்பனை செய்ய திட்டம் தீட்டியிருந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட பாஜக பிரமுகர் அலெக்சாண்டர், காவலர்களான இளங்குமரன், நாகநாகேந்திரன் மற்றும் இவர்களது நண்பரான கருப்புசாமி ஆகிய நால்வரையும் சிறையில் அடைத்த மதுரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இவர்களது கூட்டாளிகளான ராஜேஷ் மற்றும் கணேசன் தேடி வருகின்றனர்.
மேலும், பாஜக பிரமுகர் அலெக்சாண்டருக்கு சிலை கடத்தல் கும்பலுடன் தொடர்பு ஏற்பட்டது எப்படி? யார் யாருடன் அவர் தொடர்பில் இருந்தார்? சேலம் எடப்பாடியில் சிலைகளை வைத்திருந்த நபர்கள் யார்? எனவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேவேளையில் இவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 7 சிலைகள் எந்த கோயிலை சேர்ந்தது எனவும் சிலைகளின் தொன்மை குறித்த விசாரணை நடைபெற்று வருவதாகவும் சிலை கடத்தல் தடுப்புபிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
ரூபாய் 5 கோடிக்கு 7 தொன்மையான சிலைகளை கடத்த முற்பட்ட ஒரு பாஜக பிரமுகர் மற்றும் 2 காவலர்கள் கைது செய்யப்பட்டிருப்பது காவல் துறை மட்டுமல்லாமல் அரசியல் வட்டாரத்திலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.