முன்னாள் பாஜக தலைவர், மற்றும் காவல் துறை கூடுதல் எஸ்பி உட்பட பலர் தன்னை கும்பல் பலாத்காரம் செய்ததாக ராஜஸ்தான் மாநிலத்தில் பெண் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் பில்வாராவில் உள்ள பிரதாப்நகர் காவல் நிலையத்தில் பலடா உட்பட 12 பேர் மீது புகாரளித்திருப்பது அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவரது புகாரின் மீது எஃப்ஐஆர் பதிவு செய்த காவல்துறை கூடுதல் எஸ்பி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
ஜெய்ப்பூர்: பில்வாராவில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் சனிக்கிழமை அளித்துள்ள புகாரில், அஜ்மீரைச் சேர்ந்த முன்னாள் பாஜக தலைவர் பன்வர் சிங் பலடா தன்னை 2018 ஆம் ஆண்டு முதல் பலமுறை கற்பழித்ததாகவும், துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும், அமைதியாக இருந்தால் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்ததாகவும் குற்றம் சாட்டி புகாரளித்துள்ளார்.
மேலும் அவர் தனது புகாரில் ஏஎஸ்பி அந்தஸ்த்தில் உள்ள கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சஞ்சய் குப்தா மற்றும் அரசியல்வாதியின் ஊழியர்கள் உட்பட மேலும் 11 பேரின் பெயரைக் குறிப்பிட்டுள்ளார். முக்கிய குற்றம் சாட்டப்பட்டவரும் மற்றவர்களும் தன்னை ஒவ்வொரு முறையும் அச்சுறுத்தி பலாத்காரம் செய்ததாகவும் , ஆசைக்கு இணங்கவில்லை என்றால் பொய் வழக்குகளில் சிக்க நேரிடும் என்று தன்னை மிரட்டி கற்பழித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர்களும் அவரது கூட்டாளிகளும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ கிளிப்புகள் மூலம் தன்னைத் தொடர்ந்து மிரட்டி அச்சுறுத்தி வந்த நிலையில், எந்த அதிகாரியும் எந்த உதவியும் செய்யாததால், தான் உயிருக்கு பயப்படுவதாக அவர் கூறினார்.
ஒரு ஏஎஸ்பி தான் விரும்பிய இடமாற்றத்திற்காக தன்னை அரசியல்வாதியிடம் அறிமுகப்படுத்தியதாகவும், அவர் டிசம்பர் 13, 2018 அன்று பில்வாராவில் உள்ள தனது அலுவலகத்திற்குச் சென்று துப்பாக்கி முனையில் கற்பழித்ததாகவும் அந்தப் பெண் கூறினார். எஸ்பியிடம் புகார் தெரிவிப்பதாக தான் கூறியதையடுத்து அமைதியாக இருந்தால் திருமணம் செய்து கொள்வதாக கூறினார், ஆனால் இதுவரை அவர் திருமணம் செய்யவில்லை என்று புகாரில் தெரிவித்துள்ளார்.
பெண் எஸ்ஐ சனிக்கிழமை தனது புகாரை அளித்ததைத் தொடர்ந்து, முக்கிய குற்றவாளியான பன்வர் சிங் பலாரா மற்றும் அவரது ஊழியர்கள் உட்பட சிலருக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம் 376-டி உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று பில்வாரா எஸ்பி ஆதர்ஷ் சித்து தெரிவித்தார். இந்த வழக்கின் விசாரணை கூடுதல் எஸ்பி ஷாபுராவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றார்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்துள்ள புகாரில் , பன்வர் சிங் பலடாவைத் தவிர, அவரது ஓட்டுநர், தனி உதவியாளர், பாதுகாவலர் கரண், பஜ்ரங், அவரது மகன்கள் விஜய், தீரஜ், மனிஷா, ஷிவ் பன்னா, லேடி கான்ஸ்டபிள் ரஷ்மி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சஞ்சய் குப்தா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தலில் கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக 2020ல் பாஜகவில் இருந்து பலடா நீக்கப்பட்டார் என்று அஜ்மீர் துணை மேயரும் மூத்த பாஜக உறுப்பினருமான நீரஜ் ஜெயின் தெரிவித்தார்.