தமிழக அரசின் உத்தரவுக்கு விரோதமாகவும், தமிழக முதல்வரின் உத்தரவுக்கு எதிராகவும் நடந்து வரும் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் திருக்கோவில் செயல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை (31.01.2022) கோவில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கட்சியின் நகர தலைவர் கே.பி.ராஜகோபால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தூத்துக்குடி இந்து சமய அறநிலையத்துறை இணை இயக்குனருக்கு அவர் அனுப்பியுள்ள மனுவில் தமிழகத்தில் கரோனா கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டதை அடுத்து ஆலய வழிபாடுக்கு இருந்த தடைகள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இதையடுத்து இந்துக்களின் மிக முக்கிய நாட்களில் ஒன்றான தை அமாவாசை தினத்தன்று பிரசித்திபெற்ற திருநெல்வேலி டவுன் நெல்லையப்பர் சுவாமி கோயிலில் பத்திர தீபம் மற்றும் இரவு சுவாமி புறப்பாடு ஆகியவை நடைபெறும் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆனால், கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் திருக்கோவிலில் மட்டும் சுவாமி புறப்பாடு கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது பக்தர்களிடையே மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்று கடந்த ஐப்பசி மாத திருவிழாவிலும் இரவு சுவாமி அலங்காரத்தின் போது பாடப்படும் தேவாரம் பாடப்படவில்லை என்ற குற்றச்சாட்டையும் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள், செண்பகவல்லி அம்மன் கோவில் செயல் அலுவலருக்கு சாதகமாக இருந்து மௌனம் காத்து விட்டனர். அதுபோலவே தற்போது அமாவாசை தினமான நாளை சுவாமி புறப்பாடு கிடையாது என்ன சர்வாதிகாரப் போக்கில் செயல் அலுவலர் அறிவித்துள்ளார்.இதனைக் கண்டித்து நாளை (31-ம் தேதி) காலை 11 மணிக்கு மக்களைத் திரட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் முன்பு சங்கு ஊதும் போராட்டம் நடத்தப்படும்.தொடர்ந்து தமிழக அரசின் உத்தரவுக்கு விரோதமாகவும், தமிழக முதல்வர் உயர்திரு மு.க.ஸ்டாலின் உத்தரவுக்கு எதிராகவும் செயல்பட்டு, சர்வாதிகாரியாக இருந்து வரும் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் திருக்கோவில் செயல் அலுவலரை இடமாற்றம் செய்து, அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.